வேட்பாளாருக்கு வாக்கு சேகரிப்பு:


முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள  கிருஷ்ணன்கோவிலில்  நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் விருதுநகர் மற்றும் தென்காசி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது பேசும்போது, தென்காசி தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் ராணி ஶ்ரீகுமார் அவர்கள் மருத்துவர். அரசு மருத்துவராகப் பணியாற்றிய இவர், மக்களுக்குத் தொண்டாற்ற, தன்னுடைய அரசுப் பணியிலிருந்து விலகிவிட்டு, தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்கள், ஏற்கனவே உங்களுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். நாடாளுமன்றத்திலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தெளிவாகத் தன்னுடைய வாதங்களை வைத்து, மக்களுக்காகக் குரல் எழுப்புபவர்.


எய்ம்ஸ் மருத்துவமனையை 70 விழுக்காடு கட்டி முடித்துவிட்டோம் என்று, பா.ஜ.க. தலைவர் நட்டா கூறியபோது, அந்த இடத்திற்கே சென்று கட்டாந்தரையாகத்தான்  இருக்கிறது என்று பா.ஜ.க. பொய்யை அம்பலப்படுத்திய நம்முடைய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்குக் கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு திட்டத்தால் நிச்சயமாக நேரடியாகப் பயன்பெறும் மாதிரியான திட்டங்களாக நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குச் செல்லும் வரைக்கும், ஒரு தாயைப்போல் பாதுகாக்கும் – தந்தையைப்போல் அரவணைக்கும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.


சிறுபான்மை, பெரும்பான்மை மக்களுக்கு எதிரி பாஜக அரசு:


பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பா.ஜ.க. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய்கிறார்கள்?


ஒன்றிய அரசு பணிகளில் மண்டல பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை! ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்குவது இல்லை! நாம் கூறும் இதை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசும்போது புள்ளிவிவரத்துடன்  கூறினார்! ஒன்றிய அரசின் மிக உயர் பொறுப்பில் இருக்கும், அதாவது நம் நாட்டையே நிர்வகிக்கும் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர்தான், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்! பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறைவுதான். இது நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை  பெரிய பொறுப்புகளுக்குச் செல்வதை காலம் காலமாகத் தடுத்த இவர்கள், இப்போதும் தங்கள் கையில் ஆட்சியை வைத்திருப்பதால் தடுக்கிறார்கள். அதுக்கு என்னென்ன புதிய சட்டங்கள் வருகிறது? குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை!  ஏழை – நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு, ஒன்றிய பணிக்கான தேர்வுகளில் தமிழைப் புறக்கணித்து, இந்தித் திணிப்பு ,சமஸ்கிருதத் திணிப்பு செய்து, நம்முடைய பிள்ளைகளின் வேலைகளைப் பறிக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு என்று ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப் பார்க்கிறார்கள்.


இப்படி அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பா.ஜ.க.! அதனால் தான் கூறுகிறோம். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பா.ஜ.க. எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் ஒன்றிய அளவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம், போராடுகிறோம். அதையாவது செய்கிறார்களா? அதையும் மறுக்கிறார்கள்! இதனால்தான் கூறுகிறோம், நாட்டின் சிறுபான்மையினருக்கும் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பா.ஜ.க.தான் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்  என்றார்.


வரலாறு காணாத ஊழல்களைச் செய்துவிட்டு, அதை மூடி மறைக்க E.D. – I.T. – C.B.I. போன்ற அமைப்புகளைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது பா.ஜ.க.வை ஆட்டம் காண வைக்கும் ’இமாலய ஊழலான’ தேர்தல் பத்திர ஊழல் வெளியாகி இருக்கிறது. நாட்டின் தன்னாட்சி அமைப்புகளைக்கூட, பா.ஜ.க.வின் ஆதரவு கட்சிகள்போல் செயல்பட வைத்து, அரசியல் சட்டப்படிதான் ஆட்சி நடக்கின்றதா என்ற சந்தேகத்தை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழுக்கும் துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், வாக்கு கேட்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். பிரதமர் ஆவதற்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வந்தபோது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தாரே? அதில் எதையாவது செய்தாரா? இல்லையே!


பட்டாசு தொழிலும், பாஜக அரசும்:


2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி இராமநாதபுரத்தில் பேசிய மோடி, “சீனாவில் இருந்து பட்டாசுகள் வருவதால் குட்டி ஜப்பானான சிவகாசி பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பட்டாசுத் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம்" என்று பேசினாரே! இதற்காக அவர் செயல்படுத்திக் கொடுத்த திட்டங்கள் என்ன? சட்டவிரோதமாகச் சீனப்பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது! சீனப்பட்டாசுகள் பல்வேறு மாநிலங்களில் குறைந்த விலையில் கிடைத்தது. டெல்லியிலும் - மும்பையிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சீனப்பட்டாசுகள் கைப்பற்றப்பட்டது. சீனப் பட்டாசுகளை பா.ஜ.க. அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், சிவகாசியில் 1000 கோடி ரூபாய் அளவுக்குப் பட்டாசு தயாரிப்பு சரிவைச் சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்து இருந்தபோது, ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பில் ஆடம்பரப் பொருள்கள் பட்டியலில் பட்டாசையும் சேர்த்து 28 விழுக்காடு வரி போட்ட கட்சிதான் பா.ஜ.க.! 12 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்களே தொடர் போராட்டம் நடத்தினார்கள். பட்டாசு வெடிபொருள் தயாரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது ஒன்றிய அரசு முறையாக வாதங்களை வைக்கவில்லை. பசுமைப் பட்டாசுகளைத் தயார் செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பசுமைப் பட்டாசு என்றால் என்ன என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு வரையறை செய்யவே இல்லை.


பசுமைப் பட்டாசு தயாரிப்பதற்கு ஆலைகள் காத்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கொரோனாவிற்குப் பிறகு பட்டாசுத் தொழில் சரிந்தது. அதை மீட்டெடுக்க எந்த முயற்சியையும் பா.ஜ.க. அரசு செய்யவில்லை. இப்படி பத்தாண்டுகளாகப் பட்டாசுத் தொழிலை நாசம் செய்த அரசுதான் பா.ஜ.க. அரசு. இப்படி மக்களை பாதிக்கும் எல்லாவற்றிலும் அலட்சியமாகவும் - ஆணவமாகவும் இருக்கும் கட்சிதான் பா.ஜ.க. பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசானது, நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டது.


நாட்டை உடனடியாக மீட்டாக வேண்டும்! அப்படி மீட்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புதான் இந்தத் தேர்தல்! அதனால்தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! இந்தியா கூட்டணியை பார்த்து பயந்து, பிரதமர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.


பழனிச்சாமியும் - ஆளுநரும்:


இவர் இப்படி, வெறும் கையால் முழம் போடுகிறார் என்றால்,  மற்றொருவர் இருக்கிறார் பழனிசாமி! காற்றிலேயே கம்பு சுற்றுபவர் அவர்! நடப்பது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு! மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே…


எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா? பிரதமர் பற்றி மட்டுமல்ல; ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை! இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார்! “ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?” என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார்.


ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது? ஆளுநரால் இந்தத் தனிப்பட்ட ஸ்டாலினுக்கோ – தி.மு.க.விற்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கும் - எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா? இல்லை, பாகப்பிரிவினை, பங்காளி சொத்து பிரச்சினையா? தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதைத் தடுக்கிறார்.


தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கும் - சட்டமுன்வடிவுகளுக்கும் அனுமதி அளிக்க மறுக்கிறார். இதுதான் எங்களுக்கும் அவருக்குமான பிரச்சினை! மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடிப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தை இழிவுபடுத்துவது இல்லையா? முதலமைச்சரான எனக்கு எப்படி கோபம் வருகிறதோ, அதே கோபம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு வர வேண்டாமா? ஆளுநர் இப்படி இழுத்தடிப்பது தவறு என்று ஆளுநரைக் கேட்டிருக்க வேண்டாமா? அப்படி கேட்க மறுக்கிறார் என்றால், ஒன்று ஆளுநரைப் பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தம்! இல்லை, பழனிசாமிக்குச் சொரணை இல்லை என்று அர்த்தம்!


அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - 2019 நாடாளுமன்றத் தேர்தல் - 2019-இல் நடந்த 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் – 2019-இல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2021 சட்டமன்றத் தேர்தல் - 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்று 8 தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அ.தி.மு.க. இதற்கெல்லாம் காரணம் பா.ஜ.க.வுக்கு அடிமை சேவகம் செய்து, தமிழ்நாட்டு உரிமைகளை மொத்தமாக தாரைவார்த்து துரோகம் செய்ததுதான்! இப்படி துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? பழனிசாமி அவர்களே… முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி - பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி – அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது என்று பேசினார்