வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரச்சாரம்:


திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராபர்ட் ப்ரூஸ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விளவங்கோடு பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும் பொழுது, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தாரகை போட்டியிடுகிறார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் தாரகை. கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் தொகுதி மக்களுக்காக கடுமையாக உழைப்பதாக எனக்கு ரிப்போர்ட் வருகிறது.. உழைப்பால் உயர்ந்த, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வசந்த்குமாரின் மகன், உங்களுக்காக உழைக்க மீண்டும் விஜய்வசந்த் போட்டியிடுகிறார்.. கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் விஜய்வசந்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.  திருநெல்வேலியில் போட்டியிடும் ராபர்ட் ப்ரூஸ் மாவட்ட  காங்கிரஸ் தலைவராக மட்டுமல்ல பக்கத்து  மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை வளர்த்த பெருமைக்குரியவர். இவர்களுக்கு அளிக்கு வாக்கு உங்கள் தொகுதி எம்பியை தேர்வு செய்வதற்கு மட்டுமல்ல இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வருவதை உறுதி செய்யப்போகிறது. தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்றால் அது  உங்கள் கையில் தான் உள்ளது என்றார். 


பாஜக அரசை நோக்கி சரமாரியான கேள்வி:


மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்  அமைதியான இந்தியா அமலையான இந்தியாவாக மாறிவிடும். அதற்கு உதாரணம் மணிப்பூர் மாநிலத்தில்  நடந்த கலவரம். அதனால் தான் சொல்கிறேன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு தாய் மக்களாக வாழுகிற இந்தியாவை வெறுப்பு விதைகளை தூவி நாசமாக்கி விடுவார்கள். தற்போது அடிக்கடி தமிழகத்திற்கு வரும் பிரதமர் திருநெல்வேலிக்கு தற்போது வருகை தந்திருந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இந்த பிரதமர் எங்கே போயிருந்தார். ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் அனுப்பி வைத்து அனைத்து உதவிகளையும், மருத்துவ முகாம்களையும் நடத்தினோம். நாம் உரிமையோடு கேட்கும் உதவி தொகையை தர மறுக்கும், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம் என இந்த கூட்டத்தின் வாயிலாக பகிரங்கமாக அறிவிக்கிறேன். பாஜக எத்தகைய ஓர வஞ்சனை அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல மக்களை ஏளனமாக கிண்டல் செய்கின்றனர். ஒரு  ஒன்றிய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்கின்றார். இன்னொரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாட்டிற்காக பாஜக அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு திட்டம் கூட கொண்டு வராமல் 10 ஆண்டு காலம் என்ன சாதித்தீர்கள்? இதற்கு பதில் வைத்திருக்கிறீர்களா அல்லது அதற்கும் வாயால் வடை சுடுவீர்களா??  நாங்கள் கொண்டு வந்த சிறப்பு திட்டங்களை பட்டியலிடட்டுமா? என்று கேள்வி எழுப்பினார். 


பழனிச்சாமியின் மறைமுக பாஜக வேட்பாளர்கள்:


தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டையும்,  தமிழ்நாட்டு மக்களையும் வெறுத்த வஞ்சித்த உங்களை போல ஒரு பிரதமர் இந்திய வரலாற்றிலேயே இதுவரை கிடையாது. மோடி அவர்களே நீங்கள் வடிக்கும் கண்ணீரை உங்கள் கண்களே நம்பாது,அப்புறம் எப்படி தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள்? மோடியின் ஆட்சி அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே சாதகமான ஆட்சி, ஆனால் நாம் அமைக்கும் ஆட்சி எல்லோருக்கும் பொதுவான ஆட்சி.  நாடு பிரதமர் மோடியால் பேராபத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. ஆனால் இது பற்றி எந்த கவலையும், எந்த கொள்கையும் இன்றி வளைந்த முதுகோடு வலம் வருகிறார், பாதம் தாங்கி பழனிச்சாமி.  நாட்டை படுகுழியில் தள்ளிய பிரதமர் பற்றியோ, பாஜக பற்றியோ பேச  பழனிச்சாமிக்கு முடியவில்லை, பாஜகவிற்கு எதிரான வாக்குகளை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று களமிறக்கப்பட்டுள்ள மறைமுக பாஜக வேட்பாளர்கள் தான் பழனிச்சாமியால் களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் என்று விமர்சித்தார். மேலும் திராவிட மாடல் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லத்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். பாரம்பரிய மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். நெல்லையை தலைமையிடமாக கொண்ட ரயில்வே கோட்டம் அமைக்கப்படும் என்று பேசினார்.