தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது,இதனையடுத்து அதிமுக, திமுக, பிஜேபி, தேமுதிக, அமுமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் 24 வார்டுகளில் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் 140 நபர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 14-வது வார்டில் திமுக, அதிமுக, பிஜேபி, சுயேட்சை என 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

இதில் பிஜேபி சார்பில் ஜனனி கிருஷ்ண மூர்த்தி போட்டியிடுகிறார். இந்த பெண்மணியை ஆதரித்து திரையுலக பிரபலம் மற்றும், பிஜேபி கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு  மாநில தலைவி காயத்திரி ரகுராம் மற்றும் துணை நடிகரான சசிகுமார்  உள்ளிட்டோர் மற்றும்  பிஜேபி கட்சி நிர்வாகிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் நேதாஜி நகர் மற்றும் எம்.எம்,தெரு பகுதிகளில் வீடு வீடாக நடந்து  சென்று பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,மேலும் திரையுலகினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதால் அப்பகுதியினர் வரவேற்பு அளிப்பதுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர், நேற்று பிஜேபி கட்சி சார்பாக போட்டியிடும் ஜனனி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து டான்ஸ் மாஸ்டர் கலா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் இன்று நடிகை மற்றும் துணை நடிகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது  பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது

 



காவல்துறை விசாரணையால் கார்ப்பெண்டர் தற்கொலை - விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை காவல் ஆணையருக்கு உத்தரவு

 

மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்த ரெங்கம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " எனது மகன் ஈஸ்வரன் கார்பெண்டராக  பணியாற்றி வந்தார்.  அவர் மீது எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் தவறான புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனக்கூறி, எனது மகனை அழைத்துச் சென்று துன்றுத்தியதால், கடந்த ஜனவரியில் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த வழக்கை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரித்தால் வழக்கின் உண்மை தெரியவராது. ஆகவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 



 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு குறித்து,   மதுரை மாநகர காவல் ஆணையர், தல்லாகுளக் காவல் ஆய்வாளர் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும், அதுவரை வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்காலதடை விதித்தும் உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 



 

பிளக்ஸ் பேனர் விழுந்து உயிரிழந்த விஜய ராணியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு -  தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதில் தர உத்தரவு

 

புதுக்கோட்டை அம்மானிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், எனது மனைவி விஜயராணியே குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஏப்ரலில் அவரது சகோதர் இறப்பின் எட்டாம் நாள் காரியத்திற்காக சென்று விட்டு,  இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது மேட்டுப்பட்டி பேருந்து நிலையம் அருகே, முத்துவீரப்பன் என்பவருக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்ததில் எனது மனைவி படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

 

இதனால் எங்கள் குடும்பம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. ஆகவே எனது மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எனது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.