Chhattisgarh elections 2023: சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான  முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறு வரும் நிலையில், சுக்மா மாவட்டத்தில் ஒரு IED குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் CRPF இன் உயரடுக்கு பிரிவான கோப்ராவின் கமாண்டோ ஒருவர் காயமடைந்தார். நக்சலைட்கள் தான் இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்தடுத்து குண்டு வெடிப்பு:


சிஆர்பிஎஃப் மற்றும் கமாண்டோ பட்டாலியன்களுக்கான ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) 206வது பட்டாலியன் கூட்டுக் குழுவானது, வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கோண்டா தொகுதிக்குட்பட்ட  தொண்டமார்கா முகாமில் இருந்து எல்மகுண்டா கிராமம் வரையிலான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த ரோந்து பணியின் போது கோப்ரா பிரிவின் ஆய்வாளரான ஸ்ரீகாந்த், நக்சல்களால் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த  IED குண்டை மிதித்தபோது வெடித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று, கன்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், எல்லை பாதுகாப்பு படை வீரர் மற்றும் இரண்டு தேர்தல் அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் Chhotebethiya மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளால் தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.


சத்தீஸ்கர் முதற்கட்ட வாக்குப்பதிவு:


காங்கிரஸின் பூபேஷ் பாகல் முதலமைச்சராக உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 5 ஆயிரத்து 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் 3 அடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு சிக்கல் நிறைந்த பகுதிகளில் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 40 லட்சத்து 78 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தொகுதிகளில், காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 25 பேர் பெண்கள் ஆவர். 


பாதுகாப்பு பணிகள் தீவிரம்:


வாக்களிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 40,000 மத்திய ஆயுத போலீஸ் படையினர் மற்றும் மாநில காவல்துறையை சேர்ந்த 20 ஆயிரம் பேர் என மொத்தம் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்சல் நடவடிக்கையை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதோடு,  வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் மோப்ப நாய் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் நடைபெற்ற இந்த தாக்குதல்களால், பொதுமக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாக்கு சதவிகிதம் குறையக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.