சென்னை மாநகராட்சியில் திமுக-அதிமுக இடையே இருந்த தீவிர பிரச்சாரம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், பல வார்டுகளில் கட்சிகள் சார்பில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கண்ணகி நகர் பகுதியில் அதிமுகவிற்கு வாக்கு கேட்டு, பெண்கள் சிலர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. 




இது தொடர்பாக 10 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக வழங்கிய அவர்கள், அதை கொடுத்து பணம் அல்லது பரிசை பெறலாம் என்கிற வாக்குறுதியை வாக்காளர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த திமுக வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சம்மந்தப்பட்ட பகுதிக்குச் சென்று, அப்பெண்களை மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு வந்த கண்ணகி நகர் போலீசார், டோக்கன் வினியோகத்தில் இருந்த 4 பெண்களை கைது செய்து, அவர்களிடமிருந்து வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட 10 ரூபாய் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 




இதற்கிடையில் தொடர்ந்து அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்து வருவதாகவும், டோக்கன் முறையில் வாக்காளர்களை கட்டாயப்படுத்தி வருவதாக, திமுக வேட்பாளர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளரின் புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார், விசாரணை நடத்துவதோடு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்ததனர். 


இதனால் காவல் நிலையம் முன்பு திரண்ட திமுகவினர், அமைதியோடு திரும்பினர். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இதே போல சென்னை மாநகராட்சியின் பல வார்டுகளில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்வதாக, அதிமுக மீது திமுகவும், திமுக மீது அதிமுகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். 


நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்க உள்ள நிலையில் நேற்று பிரச்சாரம் நிறைவு பெற்றதுமே, பண வினியோகம் தொடங்கியதாகவும், வார்டுகளில் பரபரப்பான சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இரவு பகலாக அரசியல் கட்சிகள் குழுக்களாக பிரிந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 


ஒருவரை ஒருவர், பிடித்து தர வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், போலீசாரின் பணி கொஞ்சம் குறைந்திருந்தது. அதே நேரத்தில் நேரடியாக பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர். இன்று இரவு வரை இந்த பிரச்சனை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண