நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் இதுவரை 192 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், நகைகள், போதைப் பொருட்கள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.


இந்தியா முழுவதும் எப்போது?


இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 


இதற்கிடையே தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும்போலத் தனித்துக் களம் காண்கிறது. வேட்பாளர்கள் அனல்பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வேட்பாளர்களுக்கு எந்தப் பொருட்களையும் இலவசமாக வழங்கக்கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் கட்சிகள் மக்களுக்கு இலவசமாக பணம், பொருட்களை வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமே உள்ளன.  


இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்தன. பாராளுமன்ற தொகுதிகள் முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கென பறக்கும் படை குழுக்கள், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 


இந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 192 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், நகைகள், போதைப் பொருட்கள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள பட்டியல்:


ரொக்கம்- 82 .63 கோடி ரூபாய்


மது – 4.3498 கோடி ரூபாய்


மொத்த போதைப் பொருட்கள் – 0.84 கோடி ரூபாய்


விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம், வெள்ளி)- 89.41 கோடி ரூபாய்


பரிசுப் பொருட்கள் – ரூ.15.43 கோடி


மொத்த மதிப்பு – ரூ.192.67 கோடி