சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இந்த புண்ணிய பூமிக்கு ஏன் வரவில்லை. நிவாரண நிதி ஒரு பைசாக கூட கொடுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட நிதி நான்கு ஆண்டுகளாக கொடுக்கவில்லை. தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் உள்ளன. அமைதியாக உள்ள தமிழகத்தில் மதத்தின் பெயரால் பாஜக பிரிக்கப் பார்க்கிறது. இன்னும் 100 தேர்தல்கள் வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது. மதத்தால் துண்டாட நினைக்கும் பாவிகள் மண்ணாக தமிழ்நாடு மாறாது. திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வேலைகள் எதுவும் எடுபடாது. 


பாஜக எனும் மதவெறிக் கூட்டத்தோடு, நான் பெரிதும் மதிக்கிற சமூகநீதி பேசுகிற டாக்டர் ராமதாஸ் சேர்ந்துள்ளார். அவர் ஏன் சேர்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்த டாக்டர் ராமதாஸ் அதை நடத்த விரும்பாத கூட்டணியோடு போய் சேர்ந்துள்ளார். கடந்த 3 தேர்தல்களாக பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டங்களுக்கு ஆதரவளித்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. 



தாய்மொழியாக தமிழ் இல்லை என்று பிரதமர் மோடி வருத்தப்பட்டு பேசியுள்ளார். ஆனால் அகில இந்திய வானொலி என்ற பெயரை ஆகாசவாணி என்று இந்தியில் மாற்றி ஆணையிட்டுள்ளார். மோடியின் கண்ணீரை அவரே நம்பாதபோது, தமிழர்கள் நிச்சயம் நம்பமாட்டார்கள். ஒரு பக்கம் கண்ணை குத்திக்கொண்டு மறுபுறம் பாசம் காட்டுவது என்ன வகையான நடவடிக்கை கேள்வி எழுப்பினர்.


குடும்ப அரசியல் பற்றி பேசுகிறார். திமுக தமிழர் நலனுக்காக பாடுபடுகிற கட்சி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை என்று குறை கூறும் பிரதமர் மோடி அதற்கான தரவுகளை தரவில்லை. பாஜக ஆளும் மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் எங்கே சென்றார். ஏன் இதுவரை மணிப்பூர் பற்றி பேசாமல் வாய் திறக்காமல் உள்ளார். குற்ற சரித்திர பதிவேட்டில் இருக்கும் குற்றவாளிகளை பாஜக கட்சியில் சேர்த்துள்ளனர். வழக்கமாக காவல் நிலையத்தில் தான் இந்த பட்டியல் இருக்கும். 262 குற்றவாளிகள் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கை பற்றி நீங்கள் பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.


போதைப் பொருள் தொடர்பாக திமுகவில் இருந்த ஒருவர் மீது குற்றச்சாட்டு வந்தவுடனே அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை. இதைவைத்து தமிழகத்தில் போதைபொருள் அதிகரித்து விட்டது என்று பிரதமர் கூறுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து பிரதமர் வாயே திறப்பதில்லை. போதைப் பொருள் அதிகம் விற்பனையாகும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. தமிழ்நாட்டின் பெயர் அந்த பட்டியலில் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக பொய் குற்றச்சாட்டு வைக்கிறார். இதைப் போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளால் தமிழக மக்களையும் இளைஞர்களையும் பிரதமர் அவமானப்படுத்துகிறார். 


போதைப் பொருள் வழக்கில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் சிறையில் உள்ளனர். இதற்கு பிரதமர் என்ன விளக்கம் அளிப்பார். பிரதமர் என்பது உயர்பதவி. 10 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகளை சொல்ல முடியாமல் அவதூறுகளை பிரதமர் சொல்லி வருகிறார். பாஜக பற்றியோ பிரதமர் பற்றியோ பேச முடியாமல் எடப்பாடி பழனிசாமிக்கு எஜமானர் விசுவாசம் தடுக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்டகாலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடுமை என ஒட்டுமொத்த தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை. தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காக எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டார். 



திமுக ஆட்சியில் பல்வேறு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததும் திமுக ஆட்சியில்தான். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி சீரழித்ததை மீட்டு, பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி திட்டங்களால் சாதனை படைத்து வருகிறோம். மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.


இலவச பேருந்து பயணத் திட்டத்தில் 445 கோடி முறை பயணம் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் பெற்று வருகின்றனர். 16 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 


ஆனால் 10 ஆண்டுகாலம் இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர் மோடி, 10 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியால் சாதனைகளை சொல்ல முடியவில்லை. பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். சிறுபான்மை விரோத சட்டங்கள் ரத்து செய்யப்படும் தொழிலாளர் விரோத சட்டங்கள் சீராக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும்.


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். 1000 ஏக்கர் பரப்பளவில் புதி தொழிற்பூங்கா உருவாக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளோர் குறித்த கணக்கெடுப்பும் மத்திய அரசின் சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்றும் பேசினார்.