திருச்சி மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்  மூத்த தலைவர் எச்.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்...




‛‛கொரோனா பொது முடக்க காலத்தில், தொழில் நிறுவனங்களில், 50 சதவீதம் வேலை. ஆனால், 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு, மாதம் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் இருப்பது மாபாவிகள் அரசு. மஞ்சள் தூளுக்கு பதில் மரத்தூள், இலவும் பஞ்சு மற்றும் பப்பாளி விதைகளை மிளகு என்றும் கொடுத்தனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில், அமைச்சர் சக்கரபாணி தவறே நடக்கவில்லை என்றும், முதல்வர் தவறு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கூறுகின்றனர்.


திமுக அரசால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி தரமுடியாத பஞ்ச பரதேசி அரசு தமிழகத்தில் நடைபெறுகிறது. பத்து ரூபாயை கீழே போட்டு அதை எடுக்க குனியும் போது பாக்கெட்டில் இருக்கும் 2000 ரூபாயை ஜேப்படி செய்வது போல், சட்டசபை தேர்தலில் மக்களிடம் ஓட்டுக்களை திருடி உள்ளனர், திருடிவிட்டனர்.


1967ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய்க்கி 3 படி அரிசி என்று கூறியது முதல், குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் என்றது வரை திமுகவினர் போக்கிரித்தனத்தால் ஏமாற்று வேலையை செய்கின்றனர். உள்ளாட்சியில் ஆளுங் கட்சி வந்தால்தான் திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்று பொய் கற்பிக்கின்றனர். தற்போது, செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மத்திய அரசின் திட்டங்கள் தான். மாநில அரசைப் பொறுத்தவரை கமிஷன், கனெக்சன் , கரப்ஷன் என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 100 சதவீதம் உள்ள இந்து விரோத ஆட்சிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
கோயில்களை இடிக்கும் அற நிலையத்துறை என்பதே, இந்து மதத்தை அழிப்பதற்கான துறையாக உள்ளது. உளுத்துப்போன இந்து விரோத ஆட்சியாளர்களுக்கு ஓட்டு போடுவது கொள்ளிக் கட்டையால் தலையில் நம்மை நாமே சொரிந்து கொள்வது போலாகும். திமுக அரசுக்கு ஓட்டு போடுபவராக  இருந்தால் கோயிலுக்குப் போவது போலி, நெற்றியில் குங்குமம் வைப்பது போலி, மனைவிக்கு கட்டிய தாலி போலி. மத நம்பிக்கை இருந்தால், கோயிலை இடிக்கும் அரசுக்கு எதிர்ப்பை காட்டி ஒட்டு போடுங்கள்,’’ என்று அப்போது எச்.ராஜா ஆவேசமாக பேசினார். 


பாஜகவின் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்த பிரச்சாரத்தில் பங்கேற்றனர் .


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண