நெல்லை பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இதனை முன்னிட்டு  அம்மைதானத்தை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னால் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, தமிழக தேர்தல் பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், உள்ளிட்ட  காங்கிரஸ் கட்சியினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல ஹெலிகாப்டர் வந்து இறங்கும் மைதானத்தையும் ஆய்வு செய்தனர்.  


இதனைத் தொடர்ந்து  செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, ”காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 12- ந்தேதி நெல்லையில் பாளையங்கோட்டை பெல்  மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில்  நடைபெறும் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருநெல்வேலி பாராளுமன்றத்தில் போட்டியிடும் ராபர்ட் ப்ரூஸ்,  கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தென்காசி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், விருதுநகர் வேட்பாளர் மாணிக் தாகூர்  மற்றும் மதுரை, சிவகங்கை ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதற்காக பெல் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். இந்த பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். தமிழக முதல்வர் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ரோடு ஷோ நடத்தவும் வாய்ப்பு உள்ளது”  என்று தெரிவித்தார். 
   


சென்னையில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் 4 கோடி ரூபாய் கைப்பற்றியதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”அந்த ரூபாயை உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். எந்த வழக்கும் இருக்காது. வேறு எதாவது நோஞ்சான்கள் சாதாரண வேட்பாளர்கள் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருந்தால் வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்துவார்கள். அது தான் பாஜக ஸ்டைல். பண மதிப்பிழப்பு என்பது வேடிக்கைதான். நாட்டில் பணமே இல்லை, சர்வாதிகாரம் தான் மேலோங்கி இருக்கிறது. இதனால் தான் பாசிச அரசை ஒழிக்க வேண்டும் ஜன நாயகம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். எந்த வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மோடி மக்களை சந்தித்து வாக்கு கேட்க வருகிறார். இந்த துணிச்சல் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை.  இதனை சர்வாதிகாரத்தின் மேலாண்மை என்று சொல்வார்கள். பாசிச ஆட்சிக்கு கூச்சம், மாச்சம், சூடு சுரனை எதுவும் இல்லை. அவர்களோடு கொல்லை புறமாக கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவுக்கும் இது கிடையாது. ஒருவர் பறித்தவர், ஒருவர் தமிழ்நாட்டு உரிமைகளை பறிப்பதற்கு உடந்தையாக இருந்தவர். இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் , சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல்  இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், ஜனநாயகம் மலரும், சர்வாதிகாரம் வீழும்” என தெரிவித்தார்.