கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதன்படி ஜூன் 19ஆம் தேதி, அடுத்த கல்வி ஆண்டின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தேர்தலுக்கு முழுதாக 2 வாரங்கள் கூட இல்லாத நிலையில், அனல்பறக்கப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்தல் நடைபெறுவதால், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துவிட்டது. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளையுடன் (ஏப்ரல் 8) முடிகிறது.


பள்ளிகள் திறப்பு எப்போது?


அதேபோல 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று (ஏப்ரல் 6ஆம் தேதி) முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 13 முதல் 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் முறையே அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதற்குப் பிறகு மீண்டும் முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எனினும் அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.


கல்லூரிகள் திறப்பு எப்போது?


இந்த நிலையில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்துத் தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ’’2023-24 ஆம் கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் மற்றும் 2024- 25 ஆம் ஆண்டு தொடக்க நாள் குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


மொத்த வேலை நாட்களுக்குக் குறையாமல்..


2023- 2024ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்குக் குறையாமல் உள்ளது என்பதைக் கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதிப் பணி நாளை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2024- 2025 ஆம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் மீண்டும் திறக்கும் நாளாக 19.6.2024 புதன் கிழமை அறிவிக்கப்படுகிறது’’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.