தமிழ்நாட்டில் மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினருக்கு, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என அவர் செயல்பட்டு வருகிறார்.கோட் படத்தில் நடித்து வரும் விஜய் இன்னும் ஒரு படம் நடித்து முடித்ததும் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். முழுநேர அரசியல் மற்றும் மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு விஜய் தரப்பில் இருந்து பதிவுகள் வருவது வழக்கம். 






அதன்படி சமீபத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் துணையோடு மத்தியில் 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதேசமயம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்த ஒரு இடமும் கிடைக்கவில்லை. அதேசமயம் திமுக கூட்டணியில் இருந்து தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விசிக, தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஆகியவை 8 சதவிகித வாக்குகள் பெற்றது. இது மாநில கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு தேவையான தகுதியாகும். 


இதற்கிடையில் ஆந்திர சட்டப்பேர்வை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை. இந்நிலையில் மாநில கட்சி அந்தஸ்து பெறும் நாம் தமிழர், விசிக கட்சிக்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். 


இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள விஜய், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.


ஆனால் விஜய் இதுவரை தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுகவுக்கோ, அதன் கூட்டணி கட்சிகளுக்கோ வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியல் எதிரணி திமுக தான் என சொல்லாமல் சொல்லுகிறாரா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.