தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்  நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனையொட்டி  பரப்புரை செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் இறுதி கட்ட பரப்புரையில்  அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்ந்த உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் ராபர்ட் ப்ரூஸ்க்கு ஆதரவாக உள்ளவர்கள் வீடுகளுக்கும் மேலும் திமுகவினர் வீடுகளுக்கும் பறக்கும் படையினர் எந்தவித சோதனை மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டு வாடா செய்து வருவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருமான  கார்த்திகேயன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகேயன் தேர்தல் சம்பந்தமாக ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கார்த்திகேயனை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர். அதில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகும். காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் கள் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணமூர்த்திகூறும் போது, "தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்ந்தவர்களை மட்டுமே பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது தொடர்ந்து பண பட்டுவாடா செய்வது தொடர்பாக புகார் கொடுத்தும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார். மேலும் மானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனை திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து வருகிறார்கள். பாலஸ்தினபுரம் அருகில் வாக்காளருக்கு பணப்பட்டுவடா செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நபர்களை பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். இதுபோல தொடர்ந்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் பண பட்டுவாடா செய்வதை தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.