18வது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 9 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியது.
மக்களவை தேர்தல்:
இந்திய நாட்டில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும் இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வெளியிட்டு வருகின்றன. இன்று மாலை பாஜக மூன்றாம் கட்டமாக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக களம் காண்கிறது. அதில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேட்பாளர்களின் பெயர்கள்:
அதில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை தொகுதியில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோஜ் செல்வம், வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம், கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மன், நீலகிரி தொகுதியில் எல்.முருகன், பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விடுபட்ட பெண்கள்:
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெண் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது. பாஜகவில் இணைந்த விஜயதரணி, குஷ்பு, ராதிகா ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இதையடுத்து, அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கையில், அடுத்து வெளியிடப்படும் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், கன்னியாகுமரியில் போட்டியிடுவதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயதரணி, அந்த தொகுதியின் வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வருகை தந்த விஜயதரணிக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.