நெல்லை சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருக்கிறார். இந்த நிலையில் தற்பொழுது அவர் திருநெல்வேலி பாராளுமன்றம் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக கட்சி தலைமைக்கு தெரிவித்ததோடு தலைமை அறிவிப்பு முன்பாகவே அவர் தேர்தல் காரியாலையத்தை திறந்து வைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்  நேற்று மாலை பாரத ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலில் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியடைந்தார். தொடர்ச்சியாக நெல்லையில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் நயினார் நாகேந்திரனுக்கு தூத்துக்குடியில் வாய்ப்பு வழங்கப்பட்டது கட்சியினர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியதோடு அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் சற்று நேரத்திலேயே திருத்தி அமைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. அதில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது. அதன்பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்ட நயினார் நாகேந்திரனுக்கு அவரது இல்லத்தில் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். 




மேலும் அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சால்வை போத்தியும் இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார்  நாகேந்திரன் கூறும் பொழுது,  திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தலைவர்களுக்கு நன்றி. திருநெல்வேலி தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு நன்றி. அமைச்சராக இருந்த காலம் முதல் தற்போது வரை இந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பணிகளையும் செய்துள்ளேன். இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக என்னை வெற்றி பெறச் செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கினால் இந்த மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, மத்திய அரசின் நிதி அனைத்தையும் பெற்று தருவேன்.


பல்வேறு தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பின்படி நரேந்திரமோடி அவர்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவார் என்ற செய்தி வருகிறது. மீண்டும் 3 வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.  நான் வெற்றி பெற்றால் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தவும், இரு புறங்களும் சாலைகள் அமைப்பதற்கும் நிச்சயமாக மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் ஒப்புதலையும் பெற்று அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். என்னால் முடிந்த நன்மைகளை இந்த மக்களுக்கு  தொடர்ச்சியாக செய்வேன் என்றார். மேலும் திமுக அரசு அறிவித்திருக்கும் சிலிண்டர் விலை குறைப்பு பெட்ரோல் விலை குறைப்பு என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் செயல்.  சட்டமன்றத் தேர்தலில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று கூறி ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதனால் நிறைய மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனை இந்த தேர்தலில் காட்டுவர். திருமண உதவித் தொகை திட்டத்தை எடுத்துவிட்டு மாணவர்களுக்கு ஆயிரம் என்கின்றனர். தேர்தலுக்காக இப்படி கவர்ச்சியான திட்டங்களை கொடுக்கின்றனர். ஏற்கனவே இரண்டு கூட்டணி முடிந்து போய்விட்டது. மூன்றாவது பெரிய கூட்டணி எங்கள் கூட்டணி தான். நிச்சயமாக வெல்வோம். திமுகவின் எதிர்ப்பு அலைகளை கூறியே எனது வாக்கு சேகரிப்பு இருக்கும் என்றும் வருகின்ற 25ஆம் தேதி காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்