கரூரில் ஆயிரக்கணக்கான நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உள்ளே சென்றார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாந்தோணிமலை மில்கேட் அருகில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு, அங்கிருந்து பேரணியாக தாந்தோணிமலை கடைவீதி வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியதால் முன்னாள் எம்பி நாட்ராயன், அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் உள்ளே சென்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.