மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு வரும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
2 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்:
சமீபத்தில் , ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான தேர்தல் தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முக்கிய தேதிகள்:
- மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 1 நாடாளுமன்றத் தொகுதிக்கு (நாந்தேட்) நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது
- ஜார்கண்ட் மாநிலத்திற்கு வரும் நவம்பர் 13 , 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் 47 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்ற தொகுதிக்கு (வயநாடு), நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் .
- உத்தரகாண்டில் 1 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும்
அனைத்து இடங்களுக்கும் வாக்கு எண்ணிக்கையானது , வரும் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக அதிகபட்சமாக 48 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு 288 சட்டப்பேரவைகள் உள்ளன. மகாராஷ்டிராவில்தான் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை அமைந்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2.06 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 44 பொது, 28 பழங்குடியினர் மற்றும் ஒன்பது பட்டியல் வகுப்பினர் தொகுதிகள் அடங்கும். மொத்த வாக்காளர்களில் 1.29 கோடி பெண்கள், 1.31 கோடி ஆண்கள், 448 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் 2024 இல் முதன்முறை வாக்காளர்களாக 11.84 லட்சம் பேர் உள்ளனர். 1.14 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், 1706 பேர் நூறு வயதிற்கு மேற்பட்டவர்கள், 3.67 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.