நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையின் கடைசி நாளான இன்று பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை காளப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்த கட்சிகள் எதுவும் செய்யாததால் எதுவும் மாறவில்லை. 8 மாதம் முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக முழுமையாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் கோவைக்கு கொரொனா ஊசியை குறைத்தனர். பா.ஜ.க சண்டையிட்ட பின்பு பொது மக்களுக்கு ஊசி வழங்கப்பட்டது. 


கோவை தானாகவே வளரந்து வரும் நகரம். மக்கள் தன்மானத்துடன் இருப்பவர்கள் வாக்கிற்காக கொலுசு, ஹாட்பாக்ஸ், ஆயிரம் ரூபாய் பணத்திற்கு தங்கள் தன்மானத்தை அடகு வைக்க மாட்டார்கள். கோவையில் பாதாள சாக்கடை சரியாக பராமரிக்கப்பட வில்லை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. பெரிய கட்சியை சேர்ந்த கான்டிராக்டர்கள் 20 சதவீதம்,30 சதவீதம் கமிசன் அடிப்பதால் பணிகள் எப்படி தரமாக இருக்கும்? இதற்கு ஒரே மாற்று தாமரை வெற்றி பெற வேண்டும். 




கொரொனாவின் போது அனைவரும் பயந்தோம். 30 கோடி பேர் இறப்பார்கள் என ராகுல்காந்தி சொன்னார். ஸ்டாலின், திருமாவளவன் என பலரும் பல கருத்துகளை சொன்ன நிலையில், மக்களை கொரொனாவில் இருந்து காக்க 122 கோடி தடுப்பூசிகளக மத்திய அரசால் போடப்பட்டுள்ளது. அனைவரையும் வி.ஐ.பியாக கருதி இந்த அரசு ஊசி போட்டு இருக்கின்றது. தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் கொடுக்கப்பட்ட 21 பொருளில் ஒன்று கூட சரியில்லை, வாயில் வைக்க முடியவில்லை. மாநிலத்தின் முதல்வர் வீட்டில் அமர்ந்து கொண்டு வாக்கு சேகரித்து கொண்டு இருக்கின்றார். கிரவுண்டில் இறங்காமல் கிரிக்கெட் விளையாடுவதை போல முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். 2.64 கோடி பேர் ஓட்டு போடும் தேர்தலி்ல் மக்களை நேரடியாக சந்திக்க வரவில்லை. கோவையின் மாற்றத்திற்காக பா.ஜ.கவிற்கு வாக்களிக்க வேண்டும். இப்போது உங்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்பார்கள். நீங்கள் ஓட்டு போட்ட பின்  அவர்கள் காலில் விழ வேண்டும்.20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை எப்படி இருந்ததோ, போக்குவரத்து நெரிசல் இல்லாமல், அதே போன்ற கோவையை பா.ஜ.க உருவாக்கும்” என அவர் தெரிவித்தார். 




இதையடுத்து வெள்ளகிணறு பகுதியில் பேசிய அண்ணாமலை, “மத்திய அரசின் திட்டங்கள் தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்றால் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டும். பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் உடனடியாக அனைத்து தெருக்களுக்கும் தெருவிளக்குகள் போட்டு தரப்படும். பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமலும் அரசாணை இல்லாமலும் முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக குழு ஒன்று கோவைக்கு வந்து கொலுசுகளை வழங்கி வருகிறது. அந்தக் கொலுசை ஆய்வு செய்த போது அதில் 16 சதவிகிதம் தான் வெள்ளி உள்ளது. சட்டமன்றத் தேர்தலின் பொழுது எப்படி காதில் பூ சுற்றினார்களோ, அதேபோன்று தற்பொழுது வந்துள்ளதாக மல்லிகைப்பூவை காண்பித்தார். அதேபோன்று இப்பகுதிக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி வேண்டும் என்றால் அதற்கு இங்கு பாஜக நிர்வாகி இருந்தால் தான் முடியும். மத்திய அரசின் திட்டங்களை எங்கு செயல்படுத்தவும் பாஜக நிர்வாகி வேண்டும். கோவில்களை காக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது பாஜக. ஆகவே பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.