ஆந்திர தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகுமாறு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் சர்ச்சை:
ஆந்திர மாநிலத்தில், கடந்த திங்களன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. ஆளும் YSR காங்கிரஸ் அனைத்து 175 இடங்களிலும் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் TDP 144 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது, ஜன சேனா 21 இடங்களிலும் மற்றும் பாஜக 10 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணியுடனும் போட்டியிடுகின்றன.
மக்களவை- சட்டப்பேரவை தேர்தலின் போது மே 13 அன்று, தெனாலியைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அன்னபத்துலா சிவக்குமார், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளரை தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், தனக்கு எதிராக சாதிவெறி கருத்துகளை கூறியதாகவும் அன்னபத்துலா சிவக்குமார் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடி அருகே YSRCP மற்றும் TDP தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதையடுத்து, திங்களன்று நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர்.
நேரில் ஆஜராக உத்தரவு:
சில இடங்களில், கள்ள ஓட்டு போட முயற்சி நடந்ததாகவும், சில இடங்களில் வாக்கு சாவடிகள் தாக்கப்பட்டதாவும் செய்திகள் வெளியாகின. மேலும், தங்கள் பூத் ஏஜெண்ட்-கள் கடத்தப்பட்டதாகவும் தெலுங்க தேச கட்சியினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், தேர்தலின் போது பல்வேறு இடங்களில் மோதல் போக்கு மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்பட்டன. இந்நிலையில், வாக்களிக்கும் போது ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக தேர்தலின் போது ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகத்தின் தோல்வி குறித்து , ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.