தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு மாநிலம் ஆந்திரா. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் அந்த மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.


யார் இந்த பவன் கல்யாண்?


தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், 2 மக்களவைத் தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வெற்றி பெற்று 100 சதவீத வெற்றியுடன் பவன் கல்யாணின் ஜனசேனா சட்டசபைக்கு செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பவன் கல்யாணின் பேச்சுக்களும், அவரது கட்சியினர் கொண்டாட்ட வீடியோக்களுமே உலா வருகின்றன. யார் இந்த பவன் கல்யாண்?


தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 2வது தம்பி நடிகர் பவன் கல்யாண். கொனிடேலா பவன் கல்யாண் இவரது முழுப்பெயர். இவர் 1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்தவர். நெல்லூரில் உள்ள பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தவர். கராத்தேவில் ப்ளாக் பெல்ட்டும் பெற்றவர். பள்ளியிலே கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றவர்.


தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம்:


தமிழில் ரஜினிகாந்தைப் போல தெலுங்கில் சிரஞ்சீவி தனி சாம்ராஜ்யத்தை நடத்தி புகழின் உச்சத்தில் இருந்த 1996ம் ஆண்டுதான், பவன் கல்யாண் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். சிரஞ்சீவியை விட சுமார் 15 வயது குறைவான பவன் கல்யாணுக்கு முதல் படம் பெரியளவு வெற்றியைத் தரவில்லை.  ஆனாலும், அவரது இரண்டாவது படமான தொலி பிரேமா படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. பட்டிதொட்டியெங்கும் வெற்றி பெற்ற இந்த படம் பவன் கல்யாணின் புகழை ஆந்திரா முழுவதும் கொண்டு சேர்த்தது.  இந்த படத்திற்கு தேசிய விருதும், 6 நந்தி விருதும் அளிக்கப்பட்டது.


அடுத்தடுத்து அவர் நடித்த பத்ரி, குஷி படங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தமிழில் இந்த படங்கள் இதே பெயரில் விஜய் நடிப்பில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து ஆக்‌ஷன் ட்ராக்கிற்கு மாறிய அவர் நடிப்பில் வெளியான குடும்பா சங்கர், பாலு படங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.


ஜனசேனா தொடக்கம்:


ஆக்ஷன் நாயகனாக சிரஞ்சீவிக்கு நிகராக தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவி 2008ம் ஆண்டு தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்காக தனது அண்ணனுக்காக பக்கபலமாக நின்றார். அந்த கட்சியின் இளைஞரணிச் செயலாளராக பவன் கல்யாண் பொறுப்பு வகித்ததுடன், தேர்தலின்போது ஆந்திரா முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஆனால், பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆந்திர சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதன்பின்பு, 2011ம் ஆண்டு சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிட்டார்.


இதன்பின்பு, கடந்த 2014ம் ஆண்டு பவன் கல்யாண் ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். இவர் கட்சியைத் தொடங்கியபோது ஆந்திரா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சிலர் அவரது அண்ணன் போலவே இவரது அரசியல் பயணமும் முடிவுக்கு வரும் என்று விமர்சித்தனர். 2014ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு – பா.ஜ.க.விற்கு ஜனசேனா ஆதரவு தெரிவித்தது. மோடிக்காகவும், சந்திரபாபு நாயுடுவிற்காகவும் பவன் கல்யாண் பரப்புரை மேற்கொண்டார்.


முதல் தேர்தலில் படுதோல்வி:


ஆந்திராவின் ஸ்ரீககுலம் மாவட்டத்தில் உள்ள உத்தனத்தில் வசிக்கும் மக்கள் சிறுநீரக கோளாறால் அவதிப்படுவதற்கு தீர்வு காண வேண்டி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவர்களை வர வைத்த சம்பவமும், இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததும் அப்போது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


2019ம் ஆண்டு முதன் முதலில் ஜனசேனா கட்சி கட்சி ஆந்திர சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது. அந்த மாநிலத்தின் 175 சட்டசபைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார் பவன் கல்யாண். அந்த தேர்தலில் கஜூவாகா, பீமாவரம் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண் இரண்டு தொகுதியிலும் தோல்வி அடைந்தார். ஆனால், ஜனசேனாவின் ராபகா வாரா பிரசாத ராவ் மட்டும் ரசோல் தொகுதியில் இருந்து ஒரு உறுப்பினராக ஜனசேனாவிற்காக முதன்முதலில் சட்டசபைக்குச் சென்றார். முதல் தேர்தலிலே 6 சதவீத வாக்குகளை ஜனசேனா பெற்றது.


சொன்னதை செய்து காட்டிய பவன் கல்யாண்:


கடந்தாண்டு திடீரென சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவை சிறைக்கே சென்று நேரில் சந்தித்தார் பவன் கல்யாண். அப்போது, அதிரடியாக தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கூட்டணி என்று அதிரடியாக அறிவித்தார். இந்த தேர்தல் பரப்புரையில் பவன் கல்யாண் அனல் பறக்க ஆந்திரா முழுக்க பரப்புரை மேற்கொண்டார். அவரது பரப்புரையில் குறிப்பாக சந்திரபாபு நாயுடு, பிரபல நடிகர் பாலையா ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டு ஜெகன்மோகன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தோற்கடிக்காவிட்டால் எனது பெயர் பவன் கல்யாண் கிடையாது. எனது கட்சி ஜனசேனா கிடையாது என்ற முழக்கம் ஆந்திரா முழுவதும் மிகவும் வைரலாகியது. மேலும், பாய்.. பாய்.. ஜெகன் என்ற அவரின் பரப்புரையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது.


தேர்தல் பரப்புரையில் கூறியது போலவே ஜெகன்மோகனை தோற்கடித்தார் பவன் கல்யாண். அவரது கட்சியை விட அதிக இடங்கள் வென்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பவன் கல்யாண் பெற்றுள்ளார். அரசியல் வருகைக்கு பிறகு பெரியளவில் படங்களில் நடிக்காவிட்டாலும் அவருக்கான மாஸ் தற்போது வரை இருந்து கொண்டே வருகிறது. அரசியல் வருகைக்கு பிறகு அவருக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்த கப்பர் சிங் படத்தின் தொடர்ச்சியான கட்டமராயுடு( வீரம் பட ரீமேக்) சர்தார் கப்பர் சிங், வக்கீல் சாப் ( பிங்க் பட ரீமேக்), பீம்லா நாயக் ( அய்யப்பனும் கோஷியும் பட ரீமேக்) ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் ஓஜி, ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாட் பகத்சிங் ஆகிய படங்கள் வௌியீட்டிற்கு தயாராக உள்ளது.


துணை முதலமைச்சர் ஆவாரா?


தற்போது ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள பவன் கல்யாண் துணை முதலமைச்சர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி தருவதற்கான வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. தனது அண்ணன் சிரஞ்சீவி சாதிக்க முடியாததை, அவரது தம்பி பவன் கல்யாண் சாதித்ததாகவும் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.