தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரபரப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை கூட்டணியில் பலவீனமாக இருந்த அதிமுக கூட்டணி தற்போது பலமானதாக மாறியுள்ளது. 

Continues below advertisement

10 தொகுதிகள் கேட்கும் தினகரன்:

எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்து வந்த தினகரன் தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று பல வார்த்தைகளால் வசைபாடிய தினகரன் தற்போது அதிமுக - பாஜக கூட்டணியின் முக்கிய அங்கமாக உருமாறியுள்ளார். மேலும், அவர் எங்களுக்குள் இருக்கும் சண்டை பங்காளிகள் சண்டை என்றே குறிப்பிட்டுள்ளார். 

நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஒரே மேடையில் தினகரன் பங்கேற்க உள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

இபிஎஸ் கொடுப்பாரா?

குறிப்பாக, தினகரன் பலமாக இருக்கும் தொகுதிகளை பட்டியலிட்டு அமமுக-வினர் கூட்டணி தலைமைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் அவருக்காக அதிமுக-வினரும் தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் பாஜக, தமாக, புரட்சி பாரதம், அன்புமணி தலைமையிலான பாமக, ஐஜேகே, இருப்பதால் அவர்களுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அமமுக கேட்டுள்ள 10 தொகுதிகளையும் எடப்பாடி பழனிசாமி கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? அல்லது தொகுதியை குறைப்பாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். மேலும், தேர்தல் செலவு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தற்போது அமமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. 

தினகரனுடன் வருவாரா எடப்பாடி பழனிசாமி?

அதேசமயம், எடப்பாடி பழனிசாமியை வசைபாடிவிட்டு, இபிஎஸ்-சிடம் இருந்து அதிமுக-வை கைப்பற்றுவேன் என்று கூறிவிட்டு அவரது தலைமையில் தினகரன் களமிறங்கியிருப்பதையும் அமமுக-வின் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

மேலும், தினகரன் போட்டியிடும் தொகுதி உள்பட அமமுக போட்டியிடும் தொகுதிகள் அவர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியே நேரடியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவாரா? அல்லது முன்னாள் அமைச்சர்கள் ஈடுபடுவார்களா? இல்லாவிட்டால் பாஜக தலைவர்கள் மூலமாகவே தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படுமா? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

பாஜக கூட்டணிக்கு 20 முதல் 25 தொகுதிகள் வரையிலும், அன்புமணி தலைமையிலான பாமக-விற்கு 10 தொகுதிகள் வரையிலும் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-வினர் சுமாரக 170 தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.