தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தைப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி கடந்த மாதம் 28ஆம் முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வேட்புமனுத்தாக்கல் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணியில் இடபங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை முன்னால் கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் , நிர்வாகிகளின் மனைவி, உறவினர்கள், சகோதரர்கள் என சீட் வழங்கபட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை அவர்களின் மனைவி, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன், ஆவின் கார்த்திகேயனின் சகோதரர் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் தற்போது நடைபெறவுள்ள நகர்புற தேர்தலில் அதிக இடங்களில் பெரும்பான்மையுடம் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக களம் இறங்கியுள்ளது. திமுக ஆட்சியில் செய்த தவறுகளை சுட்டிகாண்பித்து மக்களிடையே வாக்கு சேகரிக்க திட்டம்யிட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சியை பொறுத்தவரை அதிமுக அதிக இடங்களை வெற்றிபெற்று கைபற்றினால் யார் மேயர்? என்ற கேள்வி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் மேயர் பதவிக்கு முயற்சித்து வருகிறார்கள். இதனால் அதிமுகவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் 33 வார்டுகளை தன் வசம் வைத்துள்ள முன்னால் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்கள் தான் அடுத்த மேயர் என கட்சி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.