ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் முன்னிலையிலே அடித்துக் கொண்ட இருதரப்பினர். வாகனத்தில் ஏற்றாததால் வாகனத்தை எட்டி உதைத்து வேட்பாளர் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு. கையைப் பிடித்து மன்னிப்பு கேட்ட அதிமுக வேட்பாளர்.
மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சி வேட்பாளர்கள் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய நாடாளுமன்ற தொகுதியில் ஒன்றாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்பதால் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக திமுக ,அதிமுக தமாக ஆகிய கட்சிகள் செய்து வருகின்றனர் .
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி
இந்தநிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி. பிரேம்குமார் இன்று பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழைய பல்லாவரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் அப்பகுதி அதிமுக நிர்வாகி ராஜப்பா தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை அடுத்து அப்பகுதியில் இருந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதில் வேட்பாளர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார்.
கைகலப்பு வாகன கண்ணாடி உடைப்பு
வேட்பாளர் வாகனத்தில் ராஜப்பா ஏற முயன்ற பொழுது , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் திடீரென ராஜப்பாவை வாகனத்தில் ஏறவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தரப்பினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வேட்பாளர் வாகனத்தில் ஏறவிடாமல் செய்ததால் கோபமடைந்த ராஜப்பா ஆதரவாளர்கள் வேட்பாளரின் வாகனங்களை கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை முன்னிலையிலே இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பிரச்சனையை சமாளிக்க வேட்பாளர் பிரேம் குமார் ராஜப்பாவிடம் கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டார். இதை அடுத்து இரு தரப்பும் சமாதானம் அடைந்து , வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. காவல்துறை மற்றும் கட்சியினர் முன்னிலையிலயே இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பும் தொண்டர்கள்
இந்தியா கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் டி .ஆர் .பாலு இத்தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகளை கொண்ட தொகுதியாக இந்த தொகுதி உள்ளது. திமுகவின் முக்கிய தளபதி ஒருவராக பார்க்கப்படும் டி.ஆர்.பாலு இங்கு போட்டியிடுவதால், திமுக இந்த தொகுதியை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு அதிகம் என அரசியல் விமர்சகர்கள் மற்றும் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன. மிகவும் சவாலான தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றால், அதிமுகவினர் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும் என தலைமையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் முன்னிலையிலே நிர்வாகிகள் இப்படி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் அதிமுக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சவாலான தொகுதியில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து வேலை செய்யாமல் ஏன் இப்படி செய்கிறார்கள் என தொண்டர்கள் புலம்பவும் தொடங்கியுள்ளனர்.