அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரமிக்க அமைச்சராக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். தான் போட்டியிட்ட 3 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தோல்விகளை சந்திக்காமல் உள்ளார்.
2006 ம் ஆண்டு பேரூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்திற்கு தேர்வானார். தொகுதி மறுசீரமைப்பில் பேரூர் தொகுதி நீக்கப்பட்டதால், 2011 ம் ஆண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
அப்போது எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் பதவி, சிறிது காலத்திலேயே பறிக்கப்பட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அமைச்சர் பதவியை பெற்ற எஸ்.பி. வேலுமணியின் செல்வாக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிகரிக்கத் துவங்கியது. மூத்த கட்சி தலைவர்களை ஓரங்கட்டுவதாக இவர் மீது புகார்கள் எழுந்தாலும், அதிகாரமிக்க அமைச்சராக விளங்கி வந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.
அப்போது தொண்டாமுத்தூரில் போதிய பலம் இல்லை என்பதால், திமுக தனது கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கி விட்டு ஒதுங்கிக் கொண்டது. இதனால் 2016 தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையோடு 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 1996 ம் ஆண்டு தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதின. அதில் திமுக வேட்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நடந்த 4 தேர்தல்களிலும் திமுக, அதிமுக நேரடியாக மோதவில்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன.
அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தோற்கடித்தே தீர வேண்டுமென்ற முனைப்பே காரணம். கடந்த சில வருடங்களாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல்கள் நடந்து வந்தன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களை முதன்மைப்படுத்தி கோவையில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், ”சூப்பர் முதலமைச்சராக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். கோவை என்ன அமைச்சர் வேலுமணியின் குத்தகை பூமியா? திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் வழக்குகளில் சிறைக்கு செல்லும் முதல் ஆள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான்.” என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக தலைவர் ஸ்டாலின் குறுக்குவழியில் முதலமைச்சராக முயன்றார். அதிமுக பிளவுபட்ட போது ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளை இணைத்தது நான் தான். இரட்டை இலை சின்னத்தை மீட்டது நான் தான். அதனால் ஸ்டாலின் என் மீது கோபத்தில் உள்ளார். ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனம் நான் தான்” என்றார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தோற்கடிக்க வேண்டுமென்பதால், திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை திமுக வேட்பாளராக களமிறக்கியது.
ஜல்லிக்கட்டு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளால் அறியப்பட்ட கார்த்திகேய சிவசேனாதிபதி கடும் போட்டியை ஏற்படுத்தினார். இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பாஜக கூட்டணி மற்றும் சிஏஏ, என்.ஆர்.சி, என்பிஏ சட்டங்களால் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்கு சாதகமாக இருந்தது. இதனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பரப்புரைகளில் ”சிறுபான்மையினர் பாதுகாப்பில் அதிமுக உறுதியாக உள்ளது. கொள்கை வேறு, கூட்டணி வேறு” விளக்கமளித்தார். மேலும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொண்ட பரப்புரைகளில் பாஜகவினரை கவனமாக தவிர்த்தார்.
தேர்தல் களத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கடும் சவாலை ஏற்படுத்தினார். இரு தரப்பினரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொறுப்பாளர் என்றாலும், தொண்டாமுத்தூர் தொகுதிக்குள்ளையே முடக்கப்பட்டார். இருந்தாலும் கார்த்திகேய சிவசேனாதிபதி பெயரை எஸ்.பி.வேலுமணி எந்தவொரு இடத்திலும் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தார். அதற்கு பதிலாக திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து வந்தார். இதற்கிடையில் சில இடங்களில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்றன.
அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி “ஐபேக் நிறுவனத்தினர் 3 ஆயிரம் பேர் மற்றும் 3 ஆயிரம் ரவுடிகள் தொண்டாமுத்தூரில் இறக்கப்பட்டுள்ளனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் கலவரத்தை உருவாக்கி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கின்றனர். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஒரு பொருட்டே அல்ல, அதிமுகவினர் பொறுமையாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். இதற்கு திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி “யார் ரவுடி என்பது அனைவருக்கும் தெரியும்” என பதிலளித்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் வெல்வது இரு தரப்பினருக்கும் கெளரவப் பிரச்சனையாக மாறியது. வெற்றி எளிதல்ல என்பதை உணர்ந்து இரு தரப்பினரும் தீவிர பரப்புரை மேற்கொண்டனர். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் கவனிக்கத்தக்க தொகுதிகளில் ஒன்றாக தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளது. தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள கோவை மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடும் இழுபறி தொகுதி அறியப்பட்டுள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில், இருவரில் யார் வென்றாலும், வெற்றி எளிதல்ல. அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வெற்றி நடை தொடருமா என்பது நாளை தெரியும்.