கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனியில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கொரொனா தொற்றை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டது. திமுக அரசு அதை சரியாக கையாளவில்லை. திமுகவினர் ஏதாவது திட்டங்கள் உதவிகள் கொடுத்தார்களா? 10 ஆண்டுகளாக சிறப்பான அதிமுக ஆட்சி நடைபெற்றது. எந்த குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் போராடி தீர்ப்பினை கொண்டு அரசாணை பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. 50 ஆண்டுகளில் இல்லாத சாதனையை 5 ஆண்டுகளில் கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செய்து காட்டியது.


திமுக சட்டமன்ற தேர்தலின் பொது பொய் வாக்குறுதிகளை கொடுத்தது. 505 வாக்குறுதிகளை திமுக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தது. அதை மக்கள் நம்பினார்கள். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக. ஆட்சியமைத்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றார்கள். இன்னும் செய்யவில்லை. 5 சவரனுக்கு நகை அடகு வைத்தால் கடன் தள்ளுபடி என்றார்கள். இதனை நம்பி 50 லட்சம் பேர் நகை அடகு வைத்தனர். இப்போது யாருக்கு தகுதி என ஆய்வு செய்து வருகின்றனர் என்கின்றனர். 37 லட்சம் பேர் நகை அடகு வைத்து நடுத்தெருவில் இருக்கின்றனர். 13 லட்சம் பேர் மட்டும் தகுதி என்கின்றனர்.




பெண்களுக்கு 1000 ரூபாய் வீடு தோறும் உதவி தொகை வரவில்லை. இதனால் கடுமையான கோபத்தில் மக்கள் இருக்கின்றனர். பொங்கல் பரிசாக 2500 ரூபாயுடன் பரிசு தொகுப்பை அதிமுக அரசு கொடுத்தது. அப்போது கொடை வள்ளல் ஸ்டாலின் 5000 கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர் எதுவும் கொடுக்கவில்லை. பொங்கல் பரிசு பெருட்களை வடநாட்டில் இருந்து வாங்கி இருக்கின்றனர். இங்கு வாங்கினால் தெரிந்து விடும் என வட மாநிலத்தில் வாங்கி இருக்கின்றனர். பொங்கலுக்கு மக்களுக்கு கொடுத்த அரிசியை மாட்டிக்கு போட்டால் அந்த மாடு நம்மை முறைக்கிறது. பொங்கல் பரிசு பொருட்களின் தரம் குறித்து விசாரணை கமிசன் அமைத்து விசாரணை செய்ததில் அது உண்மை என நிரூபணம் ஆகியிருக்கின்றது.


பெரியார் கண்ட கனவை நனவாக்கியது ஜெயலலிதா மட்டு்ம் தான். உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும். அதிமுக ஆட்சி தான் சிறந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இரட்டை இலை சின்னத்தை நம்பி களத்தில் இருப்பவர்களை வெற்றி பெற வைக்கும் கடமை அதிமுக கட்சியினர் அனைவருக்கும் இருக்கின்றது. சட்டமன்ற தேர்தலில் சின்ன சரிவினால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இயற்கையே அதை சரி செய்துவிட்டது.




கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா. மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்கு கட்டிக் கொடுத்தார். இந்த திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத திட்டங்களாக இருக்கின்றது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது. மக்கள் நம்மை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.