தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் ஒவ்வொன்றிலும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிமனை திறப்பதில் மிகப்பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் 2026, ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் - சசிகலா தலைமையிலான கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. அக்கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் முடிவு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மார்ச் 28 அல்லது 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதில் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
இதற்காக அங்கு தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த அலுவலகம் அமைந்திருக்கும் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும், அதனை காலி செய்ய வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார். தற்போது அலுவலகம் காலி செய்யப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பின்னால் திமுக இருப்பதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வந்து விட்டது. இதன் பிறகு முதலமைச்சர், அமைச்சர் பதவி என்பதெல்லாம் அதிகாரம் கிடையாது.
தேர்தல் வட்டார அலுவலர் தான் இந்த தொகுதிக்கு பொறுப்பாவார். ஒவ்வொரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் அலுவலகம் திறந்தால் உடனடியாக காலி செய்யக்கோரி நெருக்கடி கொடுக்கிறார்கள். அந்தந்த இடத்தின் ஆவணங்களில் பிரச்னை இருப்பதாக வருவாய்துறை, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் வருகிறார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில் 40 ஆண்டுகளாக இருக்கிறார்கள். பிரச்னை என்றால் நீதிமன்றத்தில் சென்று உத்தரவு வாங்கி வரலாம். அந்த இடத்தின் உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள்.
எங்களால் இடத்தின் உரிமையாளர்களுக்கு பிரச்னை வரக்கூடாது என நாங்கள் காலி செய்கிறோம். ஆனால் இந்த அராஜகம் கண்டிக்கத்தக்கது. எல்லா தொகுதிகளிலும் ஆபீஸ் போட விடாமல் தடுக்கிறார்கள். இதை மக்களிடம் நாங்கள் கொண்டு சேர்ப்போம். இதுவரைக்கும் மகாபலிபுரம் தாண்டி சென்னை நகருக்குள் எந்த மண்டபத்திலும் தவெகவுக்கு நிகழ்ச்சி நடத்த இடம் கொடுக்கக்கூடாது என சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை, அரசு அதிகாரிகளை வைத்து நெருக்கடி கொடுக்கிறார்கள். இது பயத்தால் ஏற்பட்ட வெளிப்பாடு. எங்களுக்கு ஆபீஸ் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தெரு தெருவாக நடந்தாவது நாங்கள் பரப்புரை மேற்கொள்வோம்.
