அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் போரால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பெட்ரேல், டீசலின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், இதற்கு வேறு விதமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.

கலால் வரி குறைப்பு

மத்திய கிழக்கு போரால், ஹார்முஸ் ஜீலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.  இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியை 10 ரூபாய் குறைத்துள்ளதாகவும், டீசல் மீதான கலால் வரியை முழுமையாக ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெட்ரோலுக்கு 13 ரூபாயாக இருந்த கலால் வரி தற்போது 3 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு, 10 ரூபாயாக இருந்த கலால் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமிருக்காது“

மத்திய அரசின் இந்த அறிவிப்பால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாகவே, மத்திய அரசு கலால் வரியை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை, எண்ணெய் நிறுனங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை சமாளிக்க உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

“மக்களுக்கு பதிலாக சுமையை ஏற்ற மத்திய அரசு“

இதனிடையே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 122 டாலர்கள் வரை சென்றுவிட்ட நிலையில், உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அது போன்று செய்யாமல், அதாவது, சுமையை மக்கள் மீது திணிக்காமல், மத்திய அரசே அதை சுமப்பதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

8 ஆண்டுகளுக்குப்பின் ஈரானிலிருந்து எல்பிஜி வாங்கிய இந்தியன் ஆயில்

இதனிடையே, ஈரானிடமிருந்து 43,000 டன் எல்பிஜி-யை இந்தியன் ஆயில் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 8 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஈரானிடமிருந்து எல்பிஜி-யை வாங்கியுள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம். தற்போது பெறப்பட்டுள்ள இந்த எல்பிஜி-யை, பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் பகிர்ந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தற்போது பெறப்பட்டுள்ள இந்த 43,000 டன் எல்பிஜி, இந்தியாவின் அரை நாள் தேவையையே பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.