ஊழல் அரசியல்வாதிகளுக்கு எப்போது, ​​எப்படி கொடுக்க வேண்டும் என மக்களுக்கு நன்றாக தெரியும் என நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “மேற்கு வங்கத்தில் வாகன பேரணியில் பங்கேற்ற மோடி கூடியிருந்தவர்களிடம் “ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை” என சொன்னார். அப்போது கூட்டத்தில் இருந்து வந்த குரல் “ஏன் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதா?” என்பதாக இருந்தது என்று புகைப்படமாக பதிவிட்டுள்ளார்.  






மேலும் இதுதொடர்பான பதிவில், “என் மக்களின் நகைச்சுவை உணர்வு.. வாரேவா.. இயற்கையாகவே அழகு. யாருக்கு எப்போது, ​​எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக ஊழல் அரசியல்வாதிகளுக்கு... அதனால்தான் என் நாட்டு மக்களின் அறிவு எனக்கு மிகவும் பிடிக்கும்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 


கிஷோரின் தொடரும் அரசியல் பதிவுகள் 


தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராக அறியப்பட்ட நடிகர் கிஷோர் ஒரு இயற்கை விவசாயியாகவும் உள்ளார். இவர் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவர் கட்சியினரும், நம்முடைய பணத்தில் அமோகமான உணவை உண்டுவிட்டு, யாரோ சாப்பிடும் மீன், இறைச்சி குறித்து கேள்வி கேட்க வந்துள்ளனர்.நாம் கொடுத்த வேலையாலும் பணத்தாலும் உண்டு விட்டு கொடுத்த வேலையைச் செய்யாமல், நாம் “மோடி கா நமக்” (அவருக்குக் கடன்பட்டிருக்க வேண்டும்)  என்று சொல்லுகிறார். 


நம் தட்டுகளில் வெறுப்பு நஞ்சூட்டப் பார்க்கிறார்.மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீண்டும் மீறி, தேர்தலில் போட்டியிட மோடிக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? . முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை ED, CBI, IT அவருக்கு ஆதரவாக நிற்கும் போது வேலை செய்வதை விட மதவெறியையும் வெறுப்பையும் பரப்புவது அவருக்கு எளிதானது அல்லவா" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.