நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு விட்ட ஆட்சியை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸும் ஏற்கனவே களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்து வருகிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், சத்தீஸ்கரில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை ABP-CVoter சமீபத்தில் நடத்தியது. அதில், காங்கிரஸ் 48 முதல் 54 இடங்களை வென்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாஜக 35 முதல் 41 இடங்களை பெற்று காங்கிரஸுக்கு கடுமையான போட்டியை தரும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தல் 2018ல் 43.1 சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு வங்கி 2.5 சதவீதமாக அதிகரித்து 45.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இதற்கிடையில், 2018ல் பாஜகவின் வாக்கு வங்கி 33 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதம் அதிகரித்து 41.1 சதவீதமாக வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தல் நிலவரம்:
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்று 15 ஆண்டுகால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
தற்போதைய சத்தீஸ்கர் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து பாஜகவின் ராமன் சிங் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் டிஎஸ் சிங்தேவ் மற்றும் பாஜகவின் ரமேஷ் பாய்ஸ் ஆகியோர் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்தனர்.
பொறுப்பு துறப்பு:
(தற்போதைய கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் கணிப்புகள், CVoter Pre Poll மூலம் தனிப்பட்ட நேர்காணல்கள் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 18+ பெரியவர்கள், உறுதிப்படுத்தப்பட்ட வாக்காளர்கள், விவரங்கள் இன்றைய கணிப்புகளுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இது முழுவதும் கணிக்கப்பட்டவையே தவிர, 100 சதவீதமாக இருக்க வாய்ப்பில்லை. தொகுதிகளின் வெற்றி வாய்ப்பின்படி முன்போ, பின்போ சில மாற்றங்கள் ஏற்படலாம். இது வெறுமனமே கருத்துக்கணிப்பே தவிர, இதற்கு ஏபிபி எந்தவிதத்திலும் பொறுப்பு ஏற்காது)