கோவை காந்திபுரம் பகுதியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.


கேள்வி : பாஜகவிற்கு எதிராக பல்வேறு அமைப்பினரும் பரப்புரை செய்து வரும் நிலையில், உங்களது பரப்புரையின் போது அக்கட்சியினர் பிரச்சனை செய்ய என்னக் காரணம்?


பதில் : ”எப்போதும் பாஜகவை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக எதிர்த்து வந்து கொண்டிருக்கிறோம். அதனால் பாஜகவினர் எங்கள் மீது ஒரு காழ்புணர்வோடு தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். அந்த வகையில் எங்களது பரப்புரை தடுக்க முயற்சிக்கிறார்கள். அதற்காக வன்முறை மூலமாகவும் தடுக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கு எல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. வன்முறை மூலமாக எல்லாம் எங்களை தடுத்து நிறுத்த முடியாது”


கேள்வி : இந்தப் பிரச்சனை தொடர்பாக உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


பதில் : ”நாங்கள் தொடர்ந்து பரப்புரை செய்ய உள்ளோம். யாராலும் எங்களை தடுக்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற பரப்புரை செய்ய உள்ளோம். அதில் எப்போதும் பின்வாங்க போவதில்லை. தொடர்ந்து பரப்புரையை முன்னெடுத்து செல்வோம்”


கேள்வி : நாடாளுமன்ற தேர்தலில் உங்களது அமைப்பின் நிலைப்பாடு என்ன?


பதில் : ”எப்போதும் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டுக்காட்டுவது எங்களது வேலை. அந்த வகையில் பாஜக தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இயங்கி வந்திருக்கிறது. அதனால் பாஜகவை அம்பலப்படுத்துவது எங்கள் வேலை. பாஜகவை அம்பலப்படுத்தினால், பாஜக தோற்று போய்விடும்.  அது தான் ஒரே வழி”




கேள்வி : பிரதமர் மோடி தொடர்ந்து கோவைக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”வெள்ளம், புயல், மழை போன்ற எந்த விதமான நெருக்கடியின் போதும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இன்று ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். நல்லதிற்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, கெட்டதுக்கு வராதவனை நம்பாதே என்று ஊரில் சொல்வார்கள். அந்த மாதிரி நம்ம வீட்டில் நடந்த துக்கத்தை விசாரிக்க வராதவரை எப்படி மனிதராகவோ, மனித நேயராகவோ பார்க்க முடியும்? அவர் காரியத்திற்காக மட்டுமே வருகிறார் எனப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் புத்திசாலிகள். கஷ்டத்தில் இருந்த போது மதிக்காதவரை, மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள்”


கேள்வி : 60 சதவீத வாக்குகளை பெறுவேன் என அண்ணாமலை கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”தேர்தல் முடிவுகள் வரும் போது அவர் எவ்வளவு சதவீத வாக்குகளை பெறுகிறார் என்பதை பார்க்கலாம்”


கோவை ஒண்டிபுதூர் பகுதியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்றைய தினம் பரப்புரை செய்த போது, பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி தலைமையில் வந்த பாஜக கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மிரட்டவும் செய்தனர். அதற்கு பதிலடியாக திருமுருகன் காந்தியும் பா.ஜ.கவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.