கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.


கேள்வி: தனபாலின் மகன் என்ற அடிப்படையில் உங்களுக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டதா?


பதில் : “தனபாலின் மகன் என்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பல வருடங்களாக கட்சியில் பணியாற்றி வருகிறேன். ஐடி விங்க்கில் பணியாற்றியதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த கட்சியில் வாரிசுகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மற்ற கட்சியில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இந்த கட்சியில் எந்தவொரு எளிய தொண்டனுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் என்னை வேட்பாளாராக அறிவித்துள்ளார்கள்”


கேள்வி : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தற்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நிலையில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?


பதில் : ”எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. .ராசா, எல்.முருகன் இருவரும் ஆளுங்கட்சிகாரர்கள். அவர்களால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். அது எனக்கு சாதகமாக உள்ளது. கண்டிப்பாக நான் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அதேமாதிரி இரண்டு எம்.பி.க்களையும் தோற்கடித்து வரும் போது தான், எனது வெற்றி சிறப்பாக இருக்கும். அதைநோக்கி தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்”




முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?


கேள்வி : கருத்து கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாகவும், அதிமுகவிற்கு பாதகமாகவும் வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”அது கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள். நீலகிரி மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் நாங்கள் ஜெயிப்போம். எல்லா இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்பது போல தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம்”


கேள்வி : நீலகிரி தொகுதி மக்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?


பதில் : பின்தங்கியுள்ள நீலகிரி மாவட்ட வளர்ச்சிக்கு உழைப்பேன் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறேன். அன்னூர் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் புறவழிச்சாலை திட்டம் கொண்டு வர முயற்சி எடுப்பேன். மத்திய அரசில் இருந்து என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ, அத்தனையும் கொண்டு வருவேன்”.


நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா போட்டியிடுகிறார். அதேபோல பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்த இருவரையும் எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.