ABP-C Voter Opinion Poll: சில நாட்களில் தொடங்கவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.


மக்களவை தேர்தல்:


இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.


ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 3 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தற்போது 4வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன. அதில் மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 


Also Read: ABP C Voter Opinion Poll: தமிழ்நாடு- கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு - ABP- சி வோட்டர் கணிப்பு முடிவுகள் வெளியானது


இந்த தேர்தல் கணிப்பின் போது பல இணைப்பு கேள்விகளும் பொதுமக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் கேட்கப்பட்ட சுவாரஸ்யமான கேள்விகளையும், மக்களின் ஆதரவு- எதிர்ப்பு குறித்தான பதிலை காண்போம்.


கேள்வி- 1: உங்களுக்கு நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்கப்பட்டால், நீங்கள் தேர்வு செய்வது யாரை?



  1. பிரதமர் நரேந்திர மோடி

  2. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி


இதற்கு பொதுமக்கள் ABP சி – வோட்டருக்கு அளித்த பதில் விவரம்:


இந்தியா முழுமைக்கும் சராசரியாக பார்க்கும் போது, 62.40 சதவிகித மக்கள் நரேந்திர மோடிதான் பிரதமராக தேர்வு செய்வோம் என தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திதான் பிரதமராக தேர்வு செய்வோம் என 28.60 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். 


இவர்கள் இருவரும் இல்லை என்று 4.20 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு, பதில் சொல்ல விரும்பவில்லை என 4.90 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதில், தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும்தான் ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்வோம் என பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதர பகுதிகளில் நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்வோம் என தெரிவித்துள்ளனர்.


கேள்வி- 2: உங்களுக்கு எந்த அமைப்பு மீது அதிக கோபம் உள்ளது? வாய்ப்பு அளித்தால் எந்த அமைப்பை உடனடியாக மாற்றுவீர்கள்?



  1. உள்ளாட்சி அமைப்பு

  2. மாநில அமைப்பு

  3. மத்திய அமைப்பு


இதற்கு பொதுமக்கள் ABP சி – வோட்டருக்கு அளித்த பதில் விவரம்


இந்தியா முழுமைக்கும் சராசரியாக பார்க்கும் போது, 44.4 சதவிகித மக்கள் பதிலளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 23.30 சதவிகித மக்கள், மாநிலங்களில் ஆளும் அரசியல் கட்சிகளை மாற்றுவேன் எனவும், 22.9 சதவிகித மக்கள் மத்தியில் ஆளும் கட்சியை மாற்றுவேன் எனவும் 9.4 சதவிகித மக்கள் உள்ளாட்சியில் ஆளும் அமைப்பை மாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளனர்.


இதில், கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், மக்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்பை சார்ந்தவர்கள்தான். ஆனால், அவர்களுக்கு உள்ளாட்சிமீது பெரிதாக கோபத்தை காட்டவில்லை. மக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், உள்ளூர் சாலைகளை உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சிகள் அமைப்புகள் நிர்வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிக சதவிகித மக்கள் மாநில கட்சிகளை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் 0.4 சதவிகித மக்கள்தான் வேறுபடுகிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது.


மேலும், இதிலிருந்து 23.3 சதவிகித மக்களுக்கு மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சியை பிடிக்கவில்லை எனவும், 22.9 மக்களுக்கு மத்தியில் ஆளும் கட்சியையும் பிடிக்கவில்லை எனவும் கருத்துக் கணிப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர். 


கூடுதலான தகவல் என்னவென்றால், மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சியை வெறுப்பவர்களில் முதலிடத்தில் கேரள மாநிலம் உள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியை வெறுப்பவர்களில்  முதலிடத்தில் டெல்லி உள்ளது என மக்கள் தெரிவித்ததை வைத்து பார்க்க முடிகிறது. 


கருத்து கணிப்பு முறை:


சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 


கருத்து கணிப்பில் பிழை மார்ஜின் அளவானது + - 3% முதல் + - 5% இருக்கலாம் எனவும் 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Also Read: ABP C Voter Opinion Poll: ராஜஸ்தானில் மலரும் தாமரை; பஞ்சாப்பில் ஓங்கும் கை! ABP -சி வோட்டர் கணிப்பு