உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பற்றி நடிகர் விஷால் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியானது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மார்க் ஆண்டனி படம் விஷால் கேரியரில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இப்படியான நிலையில் இந்த படம் ரிலீசாக மிகப்பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டதாக சொல்லி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை விஷால் கடுமையாக நேர்காணல் ஒன்றில் விமர்சித்துள்ளார். அதாவது, “நான் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபர் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். ஒரு படம் வந்து தள்ளிப்போக வேண்டும் என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமாவை யாரும் உரிமை கொள்ள முடியாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்ன யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இதை நான் எனக்காக பண்ணவில்லை.
என்னுடைய தயாரிப்பாளர் வட்டிக்கு கடன் வாங்குபவராக இருக்கிறார். சும்மா ஏசி ரூம்ல உட்கார்ந்து கொண்டு தியேட்டரை போடு, படத்தை ரிலீஸ் பண்ணுன்னு சொல்லும் நபர் இல்லை. வட்டிக்கு வாங்கி, வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி ஒரு படம் எடுத்தால் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுங்கள் என சொல்ல நீங்கள் யார் என புரியவில்லை. நீங்கள் தான் சினிமாவை குத்தகை எடுத்துள்ளீர்களா? என நான் ஒரு நபரிடம் கேட்டேன்.
அவரை, நான் தான் உதயநிதி ஸ்டாலினிடம் சேர்த்து விட்டேன். அவரே வந்து இந்த மாதிரி விஷயம் பண்ணும்போது ஜீரணிக்க முடியவில்லை. என்னுடைய தயாரிப்பாளர் மார்க் ஆண்டனி படத்துக்காக ரூ.65 கோடி செலவழித்துள்ளார். அப்படத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என ஒன்றரை மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்டார். நீங்கள் என்னுடைய தயாரிப்பாளரிடம் இந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்ல உரிமை கிடையாது. அவர் வெளியே கடன் வாங்கி படம் பண்ணிருக்காரு. எப்ப ரிலீஸ் பண்ண வேண்டும் என தயாரிப்பாளருக்கு தெரியும்.
நீயும் ரிலீஸ் பண்ணு, நானும் ரிலீஸ் பண்ணு.நீங்க மட்டும் தான் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என ரூல்ஸ் இருக்கா?. என்னால முடியாது என சொல்லி விட்டேன். பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. மார்க் ஆண்டனி படம் தயாரிப்பாளர், ஆதிக் ரவிச்சந்திரன், எனக்கு ஒரு நல்ல திருப்பமாக அமைந்தது. நான் சும்மா இருந்திருந்தால் படம் ரிலீசாகி இருக்காது. ரத்னம் படத்துக்கு கூட பிரச்னை வரலாம். இதை சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது” என தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த குற்றச்சாட்டுகள் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
அதேசமயம் அமைச்சராகும் முன்பு வரை படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், அதன்பின் அந்த பணிகளை விட்டுவிட்டதாக மாமன்னன் பட விழாவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.