ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 


மக்களவை தேர்தல்:


இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  


ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 3 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது 4வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்:


அந்தமான் மற்றும் நிக்கோபார் ஒன்றிய பிரதேசத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 45 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 47 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதர கட்சிகள் 8 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  


இங்கு ஒரு தொகுதி மட்டுமே உள்ள நிலையில், பாஜக கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு  முடிவுகள் வெளியாகியுள்ளது.


சண்டிகர்:


சண்டிகர் ஒன்றிய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 52.2 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 45.8 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 2 சதவிகித வாக்குகளையும் பெறும் என வாக்காளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில்  கணிக்கப்பட்டுள்ளது.  


சண்டிகர் ஒன்றிய பிரதேசத்தில் ஒரு தொகுதி உள்ள நிலையில், அதில் பாஜக கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ:


தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஒன்றிய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 64 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 25 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 11 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இங்கு ஒரு மக்களவை தொகுதி உள்ள நிலையில், பாஜக கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


லடாக்:


லடாக்  ஒன்றிய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 45 சதவிகித வாக்குகளையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 42 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 13 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


லடாக்  ஒன்றிய பிரதேசத்தில் ஒரு தொகுதி உள்ள நிலையில், காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


லட்சத்தீவுகள்:


லட்சத்தீவுகள் ஒன்றிய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 53 சதவிகித வாக்குகளையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 3 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 44 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


லட்சத்தீவுகள் ஒன்றிய பிரதேசத்தில் ஒரு தொகுதி உள்ள நிலையில், காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


கருத்து கணிப்பு முறை:


சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 


கருத்து கணிப்பின் எண்ணிக்கை அளவானது 3% முதல் 5% மாறுபாடு இருக்கலாம் எனவும், 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.