தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி 12 வார்டுகளை கொண்டது. பேரூராட்சி தேர்தலுக்காக 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில், இருவரின் மனு தள்ளுபடியும், 7 பேர் வாபஸ் பெற்றனர். இந்த பேரூராட்சியில் 2170 ஆண் வாக்காளர்களும், 2397 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4561 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில்,  5 ஆவது வார்டை சேர்ந்த திலகமும், 10 ஆவது வார்டை சேர்ந்த கல்யாணி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 39 பேர் தேர்தலை சந்திக்கின்றனர். இதில், 10-வது வார்டு பகுதிகளான திரு.வி.நகர், பாரதி நகர், கென்னடி நகர், இந்திரா நகர் ஆகிய நான்கு நகரைச் சேர்ந்தவர்கள் அதிமுக கிளை செயலாளர் செல்லதுவை மனைவி கல்யாணி (55) என்பவரை பொது வேட்பாளராக அறிவித்தனர். இதையடுத்து அவர்

  வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வார்டில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், கல்யாணி  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.




இதுகுறித்து 10 வது வார்டு பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள நான்கு நகரை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, ஒவ்வொரு தேர்தலின் போதும்,  கடந்த 25 ஆண்டுகளாக சுழற்சி முறையில் நான்கு நகரில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பின்றி நிறுத்துவோம். அந்த பொது வேட்பாளருக்கு எல்லோரும் ஆதரவு தெரிவிப்பதால், வேறு யாரும் போட்டியிடுவதில்லை. அதன்படி இம்முறை பாரதி நகரை சேர்ந்தவரும் அதிமுக கிளை செயலாளருமான செல்லத்துறை மனைவி கல்யாணி என்பவரை தேர்வு செய்துள்ளோம். இது போன்று  பல தேர்தல்களை நாங்கள் ஒற்றுமையாகவும், பகைமை இல்லாமலும், செலவு இல்லாமலும் போட்டியின்றி தேர்தலை சந்திதுள்ளோம்.




இந்த வார்டில் நான்கு வார்டுகளில் உள்ளவர்களுக்குள் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக எங்கள் வார்டை சேர்ந்தவர்களே முடிவு செய்து, அதன் படி தேர்தலின் போது அடுத்தடுத்து வார்டில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம்.  இதனால் எங்கள் வார்டு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், நலத்திட்டங்கள் அனைத்து சரியாக வந்து சேர்ந்து விடும். உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், நான்கு நகர் மக்களை சமமாக கருதுவதால், கடந்த 25 ஆண்டுகளாக எந்தவிதமான அரசியல் சார்ந்த பிரச்சனைகளோ மற்ற எந்தவிதமான பிரச்சனைகளும் வந்ததில்லை. ஏழையாக இருந்தாலும், வசதிபடைத்தவர்களாக இருந்தாலும், எங்கள் நகர் மக்கள் தேர்ந்தெடுத்தால், அவர் தான் உறுப்பினர்.



தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பின்னர் எந்த கட்சியை சேர்ந்தவர் யார் பேரூராட்சி தலைவராக வருகிறார்களோ, அவருக்கு ஆதரவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம் என்றனர்.