வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 28 ம் தேதி முதல் 4 ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 4573 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1130 பேரும், 7 நகராட்சிகளில் உள்ள 1097 வார்டுகளில் போட்டியிட 1097 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதேபோல 33  பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டுகளில் போட்டியிட 2346 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து 146 பேரின் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.


இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் என்பதால், சில வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதன்படி மொத்தம் 1052 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். கோவை மாநகராட்சியில் 264 பேரும், நகராட்சிகளில் 206 பேரும், பேரூராட்சிகளில் 582 பேரும் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். இதனிடையே பேரூராட்சிகளில் 9 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதேசமயம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் யாரும் போட்டியின்றி தேர்வாகவில்லை.




இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 778 பேரும், நகராட்சிகளில் உள்ள 198 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 861 பேரும், பேரூராட்சிகளில் உள்ள 504 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1727 பேரும் போட்டியிடுகின்றன. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் மொத்தம் 802 பதவிகளுக்கு 3366 பேர் போட்டியிடுகின்றனர்.  சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன. அதேசமயம் சில பகுதிகளில் கூட்டணியில் உடன்படாத கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. உள்ளாட்சி தேர்தலில் பல முனை போட்டி என்றாலும், திமுக, அதிமுக கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.