வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதாலும், நாளை இறுதி நாள் என்பதாலும் அதிகளவிலான நபர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.




கோவை மாநகராட்சியில் உள்ள 74 வார்டுகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 26 வார்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 52 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் இலக்குமி இளஞ்செல்வி கோவை மாநகர் கிழக்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கின் மனைவியான இவர், மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளது.


இதைத்தொடர்ந்து அவர் பேட்டியின் போது கூறுகையில், ”ஏற்கனவே, கவுன்சிலராக இருந்துள்ளதால், மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அவர்களின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். அடிப்படை வசதிகள் செய்து தருவேன். பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன். சீரான குடிநீர் விநியோகம், சாலை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பேன்” என அவர் தெரிவித்தார். 




இதேபோல திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1328 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் இதுவரை போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 1602 ஆக அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் இதுவரை 839 பேரும், 7 நகராட்சிகளில் இதுவரை 413 பேரும், 33 பேரூராட்சிகளில் 350 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான நாளை அதிக எண்ணிக்கையிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 93 வார்டுகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டில் போட்டியிடுகிறது.