வாங்க, தொழில்முனைவோர் ஆகலாம்.
மைக்ரோசாஃப்ட் CEO பேர் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்? ஐடி துறையில் இருப்பவர்களுக்கும், இந்தியர் என்பதால் தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளை படிப்பவர்களுக்கும் சத்ய நாதெல்லா என்று தெரிந்திருக்கலாம். ஆனால், அதன் நிறுவனர் யார் என்று கேட்டால் கணிப்பொறியை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பில் கேட்ஸ் என்று சொல்வார்கள். நீங்க சத்ய நாதெல்லாவாக இருக்க வேண்டுமா? பில் கேட்சாகவா?
பில்கேட்சாக விரும்புவோர் தொடர்ந்து வாசிக்கலாம்.
கேட்க நல்லா தான் இருக்கு, தொழில் துவங்க பெரும் பொருளாதார பலம் இருக்கனுமே என்று யோசிக்கிறிங்களா? இன்று இந்தியாவின் பெரும் தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கியவர்கள் பட்டியலை கேட்டால் யார் பெயரெல்லாம் சட்டென்று நினைவிற்கு வரும்?
திருபாய் அம்பானி?
ஷிவ் நாடார்?
நாராயண மூர்த்தி?
வசந்தகுமார்?
ஃப்ளிக்கார்ட் பன்சால்ஸ்?
இவர்கள் யாருமே பரம்பரை பணக்காரர்கள் இல்லை. ஆர்வம், அனுபவம், அர்பணிப்பு, வாடிக்கையாளரை புரிந்துக் கொள்ளுதல், காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்வது என்று இவர்கள் ஓய்வில்லாமலும் தொய்வில்லாமலும் உழைத்தார்கள், உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வணிகத்தை 3 முக்கியம் வகைகளாகப் பிரிக்கலாம்.
- Manufacturing – பொருட்களை உற்பத்தி செய்து விற்பது.
- Trading – உற்பத்தியாளர்களிடம் பொருட்களை வாங்கி வாடிக்கையாளருக்கு கொடுப்பது.
- Service – வாடிக்கையாளருக்கு தேவையான சேவைகளை வழங்குவது.
இவை எல்லாவற்றிற்குமே குறைந்த பட்ச முதலீடாவது அவசியம் தேவை. நிறுவனத்தை பதிவு செய்வது, அலுவலகம், பணியாளர் சம்பளம் போன்ற குறைந்தபட்ச முதலீடு அவசியம். எல்லா வகை வணிகத்திற்கும் சில ஆயிரங்களில் ஆரம்பித்து பல லட்சங்கள், கோடிகள் வரை தேவைப்படும். நம்மிடம் லட்சங்களும் கோடிகளும் இல்லை என்றால், ஆயிரங்களில் முதலீடு செய்து தொழில் துவங்கலாம். கோடிகள் இருந்தாலும் கூட, ஆர்வம், அனுபவம் இன்றி பெரும் முதலீட்டில் தொழில் துவங்கக் கூடாது.
சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு உற்பத்தி சார்ந்த தொழில் துவங்க முடியுமா? முடியும். உற்பத்தி என்றாலே ஹிந்துஸ்தான் லீவரோ, கோலா நிறுவங்களோ மட்டும் தான் என்றில்லை. மெழுகுவர்த்தி தயாரிப்பது, பாக்குமட்டை செய்வது கூட உற்பத்தி தான். இதற்கு லட்சங்கள் தேவையில்லை. தங்கம் வாங்கி விற்பது மட்டுமே ட்ரேடிங்க் இல்லை. உங்கள் தெருவில் சின்னதா ஒரு மளிகை கடை வைப்பது கூட ட்ரேடிங்க் தான்.அதற்கு லட்சங்கள் தேவையில்லை. சேவை என்றாலே ஏர்டெல், இன்ஃபோசிஸ் மட்டுமில்லை. கொரியர், பில் பேமெண்ட் சர்வீஸ் ( கரண்ட் பில், மொபைல் ரீசார்ஜ், டேக்ஸ் ஃபலிங்) கூட சர்வீஸ் தான்.
இவை எல்லாவற்றையுமே சில ஆயிரங்கள் முதலீட்டில் துவங்கி, வியாபார நுணுகங்கள், வாடிக்கையாளர் தேவை போன்றவற்றை நன்கு அறிந்து, வரும் லாபத்தில் அல்லது வங்கியில் கடன் பெற்று மேலும் விரிவாக்கலாம். நான் சொல்லீருப்பதெல்லாம் புரிதலுக்காகவும் உதாரணத்திற்காகவும் தான். இதுபோல் நூற்றுக்கணக்கான தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன.
கொரொனாவால், பெரும்பாலானோர் சொந்த ஊர் வந்து வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். திடீரென்று வீட்டில் எண்ணிக்கை அதிகரித்ததால், தினமும் இட்லி தோசைக்கு மாவு அரைத்து கட்டுபடியாகவில்லை. இதை உணர்ந்து, கிராமப்புரங்களில் சிலர் மாவு அரைக்கும் மிஷின்களை வாங்கி அதில் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.
சரி, உங்களுக்கு ஏற்ற தொழிலை எப்படி தேர்வு செய்வது?
- சொந்த ஊரில் எதாவது தொழில் செய்ய வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட தொழிலை துவங்க வேண்டுமா என்பதை பொருத்து முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.
- சொந்த ஊரில் எதாவது தொழில் என்றால், உங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புற மக்கள் தொகை, என்னென்ன தேவைகளுக்காக மக்கள் வெளியூர் செல்கிறார்கள், அதை இங்கேயே விற்பனை செய்தால் வாங்குவார்களா என்று கள ஆராய்ச்சி செய்ய வேண்டும். அல்லது உங்கள் ஊரில் என்ன பொருள் அதிக அளவில் கிடைக்கிறதோ அது சார்ந்த தொழில் வாய்ப்புகள் பற்றி விரிவான தகவல்களை திரட்ட வேண்டும்.
- முதலில் சிறிய அளவில் முதலீடு செய்து, மக்களின் தேவை, வியாபார நுணுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை விரிவாக்கலாம்.
- வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து கருத்துகளை கேட்டு, அதற்கேற்ற மாற்றங்களை செய்துக் கொள்ள வேண்டும்.
- பங்குதாரர்களுடன் சேர்ந்து தொழில் செய்தால், மிக கவனமாக Partnership Deed எழுத வேண்டும். நன்கு தெரிந்த, நம் அலவரிசைக்கு ஒத்து போகும் நபர்களுடன் சேர்ந்து மட்டுமே சேர்ந்து தொழில் செய்ய வேண்டும். யாரையும் எப்போதும் மாற்றிவிடும் வல்லமை பணத்திற்கு உண்டு.
- உரிமையாளர் தொழில் செய்தால், மொத்த விவரங்களையும் குடும்பத்தாருடன் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளுங்கள். நிலுவைகளை வசூலிக்கவும், நாம் தர வேண்டியதை திருப்பித் தரவும் இது உதவும்.
- மற்றவர்கள் செய்து காசு பார்க்கிறார்களே என்பதற்காக நமக்கு தெரியாத தொழிலை செய்யவே கூடாது.
- முதலாளி என்ற ஈகோ பார்க்காமல், தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாட வேண்டும். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியூகம் வகுக்கவும், புதுப்பித்துக் கொள்ளவும், நவீனமயமாக்கிக் கொள்ளவும் அவர்கள் பங்கு தான் அதிகமாக இருக்கும்.
- மழை வரும் போது உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் போது மாவு விற்கப் போனேன், இரண்டுமே நட்டமாகிவிட்டது என்பதால், அந்த காலகட்டத்தில் இதை செய்யக் கூடாது என்பவர் தொழில் செய்ய உரியவர் அல்ல. பாக்கெட் போட்டு வித்தால் இந்த பிரச்சனை இல்லையே என்று யோசிப்பவர் தான் பெரிய தொழிலதிபர் ஆவார்.
- அதற்காக, வான்வெளியில் பேனாவில் எழுத முடியலைனா என்ன, பென்சிலில் எழுதிக் கொள்ளலாமே என்று யோசிப்பதும் தொழிலுக்கு உகந்ததல்ல. பென்சில் முனை உடைந்து விண்வெளி வீர்ர் கண்ணையே குத்திவிடும், ஆகவே அங்கே எழுத இயன்ற பேனாவைத் தயாரிக்க முயற்சி செய்பவர் தான் வெல்வார்.
- வருங்கால தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துகள்..