தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023- 2024ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு தொடங்கி நடைபெற்றது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்தனர். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.05.2023 முதல் 07.06.2023 வரை பதிவு செய்தனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட 147 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தொழில் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்து உள்ளதாவது:
’’தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள நோடல் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10ம் வகுப்பு / 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 03.10.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
’’.
இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.skilltraining.tn.gov.in