இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளதாவது:
''தமிழத மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும்விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆண்டுகால ஆட்சிகளில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு மாணவர்களுடனும், அண்டை நாட்டு விளையாட்டு வீரர்களுடனும் நல்ல உடல் திறத்தோடு போட்டிகளில் பங்கேற்று, நம் மாணவ, மாணவிகள் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1992-ஆம் ஆண்டு தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கினார்.
இதன்மூலம் மாவட்டந்தோறும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து, தேவையான உணவுகளை வழங்கியும், அவர்களுக்கு வேண்டிய விளையாட்டுப் பயிற்சிகளைப் பெறும் வகையிலான சாதனங்களைக் கொடுத்தும், தமிழகத்தை விளையாட்டில் சிறந்த மாநிலமாக உருவாக்கியது அதிமுக ஆட்சிக் காலங்கள்.
அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையில் தமிழகம் உச்சம்
மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டு, விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் தங்கி பயிற்சி பெறவும், பள்ளிக்குச் செல்லும் வகையில் விளையாட்டு (மாணவர்) விடுதிகள் பெருமளவில் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்டன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், தமிழகம் விளையாட்டுத் துறையில் உச்சம் தொட்டது.
1995-ல் சென்னை நேரு விளையாட்டு அரங்கை பல கோடி ரூபாய் செலவில்புனரமைத்ததுடன், சென்னையில் உள் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் & குளங்கள் போன்றவை அமைக்கப்பட்டு, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சீரோடும், சிறப்போடும் நடத்தப்பட்டன. கோயம்பேட்டில் தெற்காசிய விளையாட்டு கிராமமும் உருவாக்கப்பட்டது. மாநில அளவில் மாவட்டந்தோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
அரசின் சாதனைகள்
வெற்றி பெற்றவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட அரசு வேலைகளில் 3 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 12524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது,
இவ்வாறு, கழக அரசின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருசில சாதனைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால், விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 40 மாத காலத்தில் தமிழக விளையாட்டுத் துறை, விளையாட்டு மந்திரியின் கையில் சிக்கி சின்னாபின்னமாகக் காட்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களையும், விளையாட்டையும் ஊக்குவிப்பதற்கு பதிலாக, தங்களுடைய சுய முயற்சியால் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த “கிரிக்கெட் வீரர் தோனி முதல் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்” வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு வெற்றி பெற்றதாக கடையில் வாங்கிய கோப்பையுடன், பாஸ்போர்ட்டே இல்லாதவருடனும் இந்த ஆட்சியாளர்கள் உடன் நின்று புகைப்படம் எடுத்து சுய தம்பட்டம் அடிப்பதையே தொழிலாகக் கொண்டு நடமாடி வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்.
விளையாட்டு மந்திரியின் தலையாய சாதனை
தனக்கு வேண்டிய ஒருசிலரை திருப்திப்படுத்தவும், அவர்கள் கோடிகளில் புரளவும், பல நூறு கோடி ரூபாயை செலவு செய்து, ஒரு சிலரைத் தவிர பொதுமக்களுக்கு பயனற்ற ஃபார்முலா-4 கார் பந்தயத்தை நடத்தியதுதான் இந்த விளையாட்டு மந்திரியின் தலையாய சாதனை.
இந்நிலையில், சிவகங்கையில் நடைபெற இருக்கும் விழாவில் பங்கேற்க உள்ள வாரிசு மந்திரி உதயநிதியை வரவேற்க, விளையாட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை வைத்து கொடி, தோரணங்களைக் கட்டச் சொல்வதும், மைதானத்தை சுத்தப்படுத்தச் சொல்வதுமான வேதனை தரக்கூடிய செய்தி மற்றும் வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வலம் வருவது வேதனையானது. அகந்தையின் உச்சமாகும்.
தமிழக விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும், விளையாட்டில் ஆர்வம் மிக்க மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் பதிலாக, அவர்களை வேலைக்காரர்கள் போல் நடத்தும் இந்த விடியா திமுக அரசுக்கும், விளையாட்டுத் துறையை கையில் வைத்திருக்கும் மந்திரி உதயநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்''.
இவ்வாறு R.B. உ.தயகும௱ர் தெரிவித்துள்ளார்.