டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.


2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.


இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம்


இதற்கிடையே இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்து, பிறகு அதை அடித்துவிட்டு, வேறு ஒரு பதிலைத் தேர்வு செய்தால், அந்த கேள்விக்கான மதிப்பெண், மதிப்பெற்றதாக (இன்வேலிட்) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


எந்த எழுத்தில் எத்தனை விடைகள்?


அதேபோல ஏ, பி, சி, டி என ஒவ்வொரு எழுத்துக்கும் எத்தனை விடைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி, அதை மொத்தமாகப் பதிவிடவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காகத் தனியாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. 


இந்த நிலையில், தேர்வு முடிந்த உடனேயே குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்புகளைத் தனியார் மையங்களும் தனி நபர்களும் வெளியிட்டனர். எனினும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இன்னும் அதிகாரப்பூர்வமான விடைக் குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.


ஆன்சர் கீ எப்போது வெளியாகும்?


டிஎன்பிஎஸ்சி சார்பில், குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த வாரத்திலேயே விடைக் குறிப்புகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.


தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியான பிறகு, தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். அவை சரிபார்க்கப்பட்டு, இறுதி விடைக்குறிப்புகள் வெளியாகும்.


தேர்வு முடிவுகள் எப்போது?


குரூப் 4 தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/