டிசம்பர் மாதம் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11 நாட்கள் விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


2023- 24ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் படிக்கும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு அண்மையில் வெளியானது.  இதன்படி, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.


பொது வினாத்தாள்


கடந்த முறையைப் போலவே இந்த முறையும் மாநிலம் முழுவதும் பொது வினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செட் வினாத் தாள்கள் தயார் செய்யப்பட உள்ளன. அவை தேர்வுக்கு முந்தைய நாள் மதியம் 2 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்கான வினாத் தாள்களையும் கால அட்டவணையையும் எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது.




தேர்வு தேதிகள்


6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி மொழித்தாளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி விருப்ப மொழிப் பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. டிசம்பர் 13ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. டிசம்பர் 15ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வும் டிசம்பர் 18ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது.


தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் டிசம்பர் 21ஆம் தேதி உடற்கல்வி பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது.


அரையாண்டு விடுமுறை


அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 21 அன்று முடிகிறது. அதாவது 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 22ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு முடிகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி முடிகிறது. 22ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு, 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 


ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1 வரை விடுமுறை அளிக்கப்படும் நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இறுதி வேலை நாள்


முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு பள்ளி இறுதி வேலைநாளாக ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.