தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மற்றும் பி.ஆர்க். படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து செமஸ்டர் தேர்வுகளின் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 28 முதல் ஜூலை 30 வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான. இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், கரோனா பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெற்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இந்நிலையில் பி.இ., பி.டெக். மற்றும் பி.ஆர்க். படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு, ஏப்ரல் - மே மாத செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை மாதத்தில் முடிவடைகின்றன. முதல் செமஸ்டர் முதல் 8ஆவது செமஸ்டர் வரை அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.
இதையொட்டி அண்ணா பல்கலைக்கழக, கல்லூரிகளில் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. இந்த சூழலில் நேரடி செமஸ்டர் தேர்வுகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்