2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியிலோ அல்லது மே மாதத்தின் தொடக்கத்திலோ வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10, 12ஆம் வகுப்புகள் ஒரே நாளில் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று வெளியாகின. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 18ஆம் தேதி முடிந்த நிலையில், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி நடந்து முடிய உள்ளன.

மீண்டும் பொதுத் தேர்வு

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் முடிந்த கையோடு, தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை நடத்தும்.

அனைத்துப் பொதுத் தேர்வுகளும் நடந்து முடிந்தபிறகே, மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும் என்று ஏற்கெனவே தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்து இருந்தார். எனினும் இந்த நேரத்தில் சிபிஎஸ்இ வாரியம் அளிக்கும் உளவியல் ஆலோசனை உதவியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு மாதத்துக்குள்ளாகத் தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, சிபிஎஸ்இ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் இன்னும் ஒரு மாதத்துக்குள்ளாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு, முடிவுகள் வந்த பிறகு மாணவர்கள் cbse.gov.in  என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவை அறியலாம். அல்லது https://results.cbse.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பெறலாம். 

பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வாரியம் துணைத் தேர்வுகளை (supplementary exams ) நடத்தும்.

அதேபோல மதிப்பெண்களில் போதாமை உள்ள மாணவர்கள், மதிப்பெண் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் இதற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: cbse.gov.in