அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டை நீக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநிலம் அறிவித்ததை அடுத்து, சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது அடுத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜக தலைமையிலான அரசு அமைந்தபிறகு, அரசுப் பள்ளிகளில் மதிய உணவை வழங்க இஸ்கான் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தரமான உணவை வழங்கும் என்று கூறப்பட்டாலும் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே அளிக்கப்படு வந்த முட்டை, மதிய உணவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
குஜராத் ஜிம்கானா
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. டெரிக் ஓ பிரியன், இப்போதுதான் ’’குஜராத் ஜிம்கானா’’வின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.
வங்கத்தில் உள்ள புதிய பாஜக அரசு, எதிர்ப்பாளர்கள் மீது முட்டைகளை வீசித் தாக்குதல்களை அரங்கேற்றுகிறது. ஆனாலும், மதிய உணவிலிருந்து முட்டைகளை நீக்குவதன் மூலம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மறுக்கிறது. திணிக்கப்பட்ட இந்த சைவ உணவு முறையை வங்காளம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஏன் சைவ உணவை உண்ண வேண்டும்?
மம்தா பானர்ஜி ஆதரவாளரான குமால் கோஷ் கூறும்போது, ‘’நாங்கள் மத அமைப்பான இஸ்கானை மதிக்கிறோம். ஆனால், இந்த நடவடிக்கையை அல்ல. மாணவர்கள் ஏன் சைவ உணவை உண்ண வேண்டும்? குழந்தைளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். நிதி அமைச்சர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இஸ்கான் சொல்வது என்ன?
இதுகுறித்து இஸ்கான் துணைத் தலைவர் ராதா ராமன் தாஸ், ’’2012ஆம் ஆண்டே வடக்கு கொல்கத்தா பகுதியில் மதிய உணவை வழங்கினோம். இந்தியா முழுக்க சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதிய உணவு வழங்கி வருகிறேன்.
முட்டை புரதத்தின் மூலம் என்று எந்த அறிவியல் ஆய்வின் மூலமும் நிரூபிக்கப்படவில்லை. விராட் கோலி மாதிரியான வீரர்கள், சுத்த சைவம் என்றாலும் டாப் பொஸிஷனில் உள்ளார்கள். ஒலிம்பிக் வீரர்கள் கூட இருக்கிறார்கள்.
ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, உரிய மெனுவை தயார் செய்து, வழங்க உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
