ஆசிரியர் பணி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதங்களுக்கு மேலாகியும் பணி வழங்கப்படவில்லை என தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3,192 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கக் கோரி புத்தகங்களை ஏந்தி, குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் புகைப்பட முகமூடி அணிந்து குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நடந்தது என்ன?


2012, 2013, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற டெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்காக BT/ BRTE போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.


கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வை, எழுதிய நிலையில் மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை பணி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2800 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஏமாற்றம்தான் மிச்சம்


இன்று எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கலைச்செல்வி கூறும்போது, ’’ஆசிரியர் பணி நியமனத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணி நியணம் வழங்கவில்லை. நவம்பர் மாதம் பணி ஆணை வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியிருந்தார்கள். நாங்களும் நவம்பர் மாதம் வரை காத்திருந்தோம். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.


காரணம் கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறுகின்றார்கள். அரசு நினைத்தால் அந்த வழக்கை உடனே முடித்து வைக்க முடியும் ஆனால் ஏன் காலதாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கல்வித் துறையில் அமைச்சு பணியாளர்களாகப் பணிபுரிந்து வருபவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வில் பணி நியமனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கால் எங்களுக்கு பணி நியமனம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.


2012 -13 காலகட்டங்களில் தேர்வு எழுதிய எங்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கவில்லை. இதுவரை மூன்று தேர்வுகளை எழுதி விட்டோம். மூன்றிலும் தேர்ச்சி பெற்று விட்டோம். ஆனாலும் அரசுப் பணி வாங்கி, ஆசிரியர் வேலைக்குச் செல்ல முடியவில்லை.


கூலி வேலைக்குச் செல்லும் ஆசிரியர்கள்


தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் வேறு நிறுவனங்களில் வேலைக்கும் செல்ல முடியவில்லை. தேர்ச்சி பெற்ற பல்வேறு ஆசிரியர்கள் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.


வேதியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார். 50 வயது கடந்தும் பலருக்கு இங்கு பணி நியமனமில்லை... அரசு ஊழியர் ஆகிவிடலாம், ஆசிரியர் ஆகிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் நடக்கவில்லை.


எங்களுக்காக குரல் கொடுக்கவும் போராடவும் யாரும் இல்லை. அதனால் நாங்களே எங்களுக்காகப் போராடுகிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.


அரசுப் பணி நியமனம் செய்ய வேண்டும்


எங்களது நேரடி நியமனத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்கி அனைவருக்கும் அரசுப் பணி நியமனம் செய்திட வேண்டும் என கோருகிறோம்’’ என்று கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.