சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு, வாய் பேச முடியாத அரசுப் பள்ளி மாணவிகள் சைகை மொழியில் பாடும் தமிழ்த் தாய் வாழ்த்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும், இன்று (டிசம்பர் மாதம் 3ஆம் தேதி) மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சைகை மொழியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் மாணவிகளின் நெகிழ்ச்சி வீடியோவை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமானது, 1992 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை அனுசரிப்பதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுடைய பிரச்சினைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், உரிமைகள் மற்றும் நல்வாழ்விற்கான ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் தினத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம் ஆகியவை ஊதா நிற மின் விளக்குகளால் ஒளிர விடப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் உள்ள பல அராசங்கங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானவற்றை செய்து கொண்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லும் வகையிலான, புதிய பாதையை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது. இதை பலரும் வரவேற்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் தேவை
ஆனால், மெரினா கடற்கரை பாதை போன்று, அனைத்து கடற்கரைகளிலும் அமைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் கழிப்பறை இருப்பது போல், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் திரையரங்குகள், மால், பேருந்துகள் உள்ளிட்டவைகளில் மாற்றுத்திறனாளிகள் செல்லுவதற்கு இயலாத இடமாக உள்ளது. ஆகையால், இதுபோன்ற இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெகிழ்ச்சி வீடியோ
இதற்கிடையே சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு, வாய் பேச முடியாத அரசுப் பள்ளி மாணவிகள் சைகை மொழியில் பாடும் தமிழ்த் தாய் வாழ்த்து வீடியோவை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அசோகபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.