புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம் நீடிப்பதால், மாணவர்களின் அலைச்சலைப் போக்க உடனடியாக திறக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:
''தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதிக அளவாக ஐந்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், புதிய மாவட்டங்களில் இன்று வரை தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. மிகவும் முதன்மையான தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை திறப்பதில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கது.
தேர்வு சார்ந்த தேவைகள்
பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்தல், தனித் தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தல், மாணவர்களிடமிருந்து தேர்வுக் கட்டணத்தை வசூலித்தல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் இடையே பாலமாக செயல்படுதல் உள்ளிட்ட 19 வகையான பணிகளை தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உதவி இயக்குனர் அலுவலகங்கள் இல்லாததால், பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் எந்த மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதோ, அந்த மாவட்டத்தின் தலைநகரத்திற்கு சென்றுதான் தேர்வு சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கமே, அனைத்துத் தரப்பு மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பதுதான். புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமும், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் அமைப்பது மட்டுமே தேவைகளை நிறைவேற்றி விடாது. அனைத்துத் தரப்பு மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்க என்னென்ன அலுவலகங்கள் புதிதாக திறக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் உடனடியாக திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.
புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்கள் அமைப்பதற்காக கருத்துருக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு, கல்வித் துறை, நிதித் துறை ஆகியவற்றின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் நிலையிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படவில்லை. புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ள நிலையில், நடப்பாண்டிலாவது கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதையும் வாசிக்கலாம்: College Fees Refund: இந்த மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி தாங்க.. யுஜிசி அதிரடி உத்தரவு