வேலூர்: சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Continues below advertisement

10 கோடி முதலீடு செய்ய ஒப்புதல்

இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி  மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்யவுள்ளன.

Continues below advertisement

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும்  முதலீட்டு நிறுவனமான தின்குவேட், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது.  டீப் டெக், ஃபின்டெக், ஹெல்த் டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும்.  இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.

தின்குவேட் நிறுவனம் செய்து வரும் உதவி

ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.

அதேபோல வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை  பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

பங்கேற்றவர்கள் யார், யார் ?

நிகழ்வில் விஐடி துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழகத்தின்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.