நாடு முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பள்ளியில் பாதுகாப்பான முறையில், சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடுவேன் என்று மாணவர்கள் பள்ளியில் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அதைப் புகைப்படம் எடுத்தும் அனுப்பவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.


சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவோம். விநாயகர் சிலைகளை தமிழ அரசு அறிவித்த இட்னக்களில் மட்டுமே கரைப்போம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளைத் தவிர்ப்போம். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் சிலைகளை தவிர்ப்போம். விழா முடிந்தவுடன் குப்பைகளை உரிய இடத்தில் போடுவோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் அதில் கூறப்பட்டு இருந்தன.


அரசு விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படாத நிலையில், இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.  இந்நிலையில் விநாயகர்‌ சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில்‌ பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்‌ தொடர்பாக ஊடகங்களில்‌ வெளிவந்துள்ள செய்திகள்‌ குறித்து பின்வருமாறு விளக்கம்‌ அளிக்கப்படுகிறது என்று சுற்றுச்சூழல்‌, காலநிலை மாற்றம்‌ மற்றும்‌ வனத்துறை அரசு முதன்மைச்‌ செயலாளர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:


’’விநாயகர்‌ சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள்‌ / அமைப்பாளர்கள்‌ செய்ய வேண்டிய / செய்யக்கூடாத பணிகள்‌ தொடர்பாக பொது மக்களுக்கு ஆண்டுதோறும்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்‌ வாயிலாக சில அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.


மேலும்‌ உயர் நீதிமன்றம்‌ மற்றும்‌ தேசிய பசுமை தீர்ப்பாயம்‌ (தென்மண்டலம்‌) வாயிலாக பெறப்படும்‌ அறிவுறுத்தல்கள்‌ பொது மக்களுக்கும்‌, மாவட்ட நிர்வாகத்திற்கும்‌ செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.


இவ்வாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால்‌ வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர்‌ சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள்‌ / அமைப்பாளர்கள்‌, சிலை செய்வோர்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்படுவது ஆகும்‌.


தவறான புரிதலில் வெளியான சுற்றறிக்கை


இந்த சூழ்நிலையில்‌, ஒரு சில மாவட்டங்களில்‌ தவறான புரிதலின்‌ அடிப்படையில்‌ பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல்‌ / உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.


இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள்‌, அரசின்‌ ஆணைகளுக்கு முற்றிலும்‌ முரணானது என்பதால்‌, ஒரு சில மாவட்டங்களில்‌ மட்டும்‌ வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள்‌ முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.


அலுவலர்கள்‌ மீது துறை ரீதியான நடவடிக்கை


மேலும்‌ இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள்‌ மீது துறை ரீதியான நடவடிக்கையும்‌ எடுக்கப்படும்''.


இவ்வாறு சுற்றுச்சூழல்‌, காலநிலை மாற்றம்‌ மற்றும்‌ வனத்துறை அரசு முதன்மைச்‌ செயலாளர் தெரிவித்துள்ளார்.