விழுப்புரம்: விழுப்புரத்தில் இயங்கி வரும் அரசின் முதுகலை விரிவாக்க படிப்பு மையத்தை மூடுவதற்கான பணிகள் நடப்பதால், மாணவர்கள், கவுரவ விரவுரையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Continues below advertisement


அரசின் முதுகலை விரிவாக்க படிப்பு மையம் மூடல்


விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசின் முதுகலை விரிவாக்க படிப்பு மையம் கடந்த 2010-11ம் ஆண்டில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு, கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வந்தது. தொடக்கத்தில் எம்.ஏ., ஆங்கிலம், எம்.எஸ்சி., கணிதம், வேதியியல், எம்.காம்., வணிகவியல் என 4 முதுகலை படிப்புகள் இருந்தன. 2017-2018ம் கல்வியாண்டில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக எம்.எஸ்சி., விலங்கியல், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ., என 4 துறைகள் சேர்க்கப்பட்டு 8 படிப்புகள் இருந்தது.


கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் படித்து பயன்


அதனைத் தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் 2018-2019ம் கல்வியாண்டில், இந்த உயர் கல்வி மையத்திற்கு தனியாக, விழுப்புரம் சாலாமேடு பகுதியில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மையத்தில் மாணவர்கள் படித்து வந்தனர். இந்த மையத்தில், தொடக்கத்தில் 117 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. பிறகு ஆண்டுக்கு 150, 200, 328 பேர் என உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் படித்து பயனடைந்து வருகின்றனர்.


நிதி நெருக்கடி காரணம் காட்டி மூடும் வேலைகள் நடக்கிறதா ?


இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு நிர்வாகம் மாற்றிய நிலையில், நிதி நெருக்கடி காரணம் காட்டி, இந்த மையத்தை மூடும் வேலைகள் நடப்பதாகக் கூறி அந்த மையத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


இதுகுறித்து அவர்கள் அளித்த பேட்டியில்., மையத்தில், கடந்த 2020-21ம் ஆண்டில் எம்.பி.ஏ., பாடப்பிரிவை மட்டும் நீக்கம் செய்து, பிற 7 முதுகலை பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடந்தது. 2021ம் ஆண்டு இறுதியில் முதுகலை விரிவாக்க மையம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் என அறிவித்து துணைவேந்தரையும் நியமித்தனர். அதன் மூலம் 2021-22ம் கல்வியாண்டில், 7 முதுகலை பாடப்பிரிவில், 198 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி வந்ததால், இந்த மையம் அண்ணாமலை பல்கலை கழகத்தோடு இணைக்கப்பட்டு, அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையமாக மாற்றப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு சென்று பயிலமுடியாத ஏழை மாணவர்களும், இங்கு படிக்கின்றனர்.


2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படாமல் உள்ளது !


இந்நிலையில், கடந்த 2024- 25ம் ஆண்டில் திடீரென முற்றிலும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. செப்டம்பர் வரை அறிவிப்பு வெளியிடவில்லை. அதன் பிறகு, ஆசிரியர்கள், மாணவர்கள் அப்போது அமைச்சராக இருந்த பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு தாமதமாக அறிவித்து, மாணவர் சேர்க்கை நடந்தது. மாவட்டத்திலேயே விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி மற்றும் முதுகலை விரிவாக்க மையத்தில் மட்டும்தான் முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளது. ஆனால், இந்தாண்டு 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படாமல் உள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு மட்டும் சேர்க்கை அறிவிப்பு கடந்த மே 10ம் தேதி வெளியிட்டது. விழுப்புரம் முதுகலை விரிவாக்க மையத்திற்கு இதுவரை மாணவர் சேர்க்கை அறிவிக்கவில்லை.  இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வழியின்றி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


இந்நிலையில், நிதி நெருக்கடியை காரணம் கூறி, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மையத்தை நிரந்தரமாக மூடும் போக்கில் செயல்படுகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடாதது, அதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது. ஏழை மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் முதுகலை விரிவாக்க மையத்தை செயல்படுத்த வேண்டும் என கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.